கவிஞர். டிலிகுமார்

2019 சனவரி 25ஆம் நாள் வெள்ளிக்கிழமையில் துபாய் தூயமரியன்னை கெபியின் முன் நான் கண்ட காட்சி என் விழிகளை வியப்புக்குள் வீழ்த்தியது. என் கண்களையே நம்ப முடியாமல் கைளால்; கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தேன். அவர் தான். என் அருகாமையில் மரியன்னையின் முன் மண்டியிட்டு செபித்துக் கொண்டிருப்பவர் இராஜேந்திரன்தான். சந்தேகமில்லை! கண்கள் நடத்திய சந்தேகப் பட்டிமன்றத்திற்கு முடிவு சொல்லியது மனது. அவரை ஊரில் நான் நன்கு அறிவேன். கத்தோலிக்கர், ஆனால் கடவுள் நம்பிக்கையற்றவர். கோவிலுக்கு போகிறவர்களை கொள்ளைக்காரர்களைப் போல் பார்ப்பவர்.

அவர் செபித்து எழுந்ததும், “சாமி கும்பிடுவது சாவான பாவமெனச் சொல்லும் நீ எப்படி மரியன்னையின் பக்தனாக மாறினாய்?” என்று ஆச்சரியம் பூச்சொரிந்த வார்த்தைகளில் விசாரித்தேன்.

அவர் சொன்னார், “துபாயில் இறங்கியதும், விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துச் செல்ல ஒரு பாகிஸ்தானி டிரைவர் வந்திருந்தார். அவர் என்னைக் கட்டி அணைத்து இரண்டு அரேபிய முத்தம் தந்து அழைத்துச் சென்றார். “முத்தி வரவேற்கிறார்களே!” என்ற ஆனந்தத்தில் எனக்கு மூச்சு முட்டியது. ஆனால், அந்த ஆனந்தம் பலியாடை வெட்டும் முன்பு குளிப்பாட்டி, மாலையிட்டுத் தயார் செய்வது போன்றது என்று அன்று உணரவில்லை.”

நூறு சதுரஅடி பரப்பளவுள்ள குறுகிய ஒரு அறையில் வங்காளி ஏழு பேருடன் எட்டாவது நானுமாக துபாய் வாழ்வுத் துவங்கியது. வேலையின் போது உடல் வியர்வையில் குளித்து உடை உடலுடன் ஒட்டிக் கொள்ளும். துடைத்தாலும் தீராமல் வியர்வை நெற்றியிலிருந்து மூக்கு வழியாக வழிந்து வாயில் விழும். அப்போதெல்லாம் ஊரில் கோவில் காளை போல் சுற்றித் திரிந்த நினைவுகள் சுனாமியாய் இதயத்தை சுருட்டி இரும்பில் அடிக்கும்.
கம்பெனியில் மூன்று மாதச்சம்பளம் நிலுவையானது. பணப்பிரச்சினை பங்காளி போல் தொற்றிக் கொண்டது. சகாராவிற்கு பூவிற்கப் புறப்பட்டவனைப் போல புழுங்கினேன். சாம்பாறும் சோறும் கூட என்றாவது ஒருநாள் சாப்பிடும் விருந்து போலானது. குப்பூஸ்-ம் சுலைமானியும் மூன்று வேளை பசி தீர்க்க உதவியது.

“புருசன் செத்தாலும் பரவாயில்லை புருசனைப் பெத்தவ அழ வேண்டும்;” என்ற ஆவேசத்தோடு மனைவியும், “மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறுக்க வேண்டும்” என்ற ஆத்திரத்தோடு அம்மாவும் உக்கிரத்தோடு நடத்திய உரிமை முதலிடப்படுத்தும் போட்டியில் தொலைபேசி எனக்குத் துக்கத்தின் அமுதசுரபியாகியது. தூக்கம் ‘கட்டிங்’ கேட்டு விழித்திருப்புப் போராட்டம் நடத்தியது.

பட்டாம் பூச்சிப் பறந்த எனது எதிர்காலக் கனவுகளில் பருந்து பறக்கத் துவங்கியது. ‘என்னைப் புரிந்து கொள்ள யாரும் இல்லை’ என்ற விரக்தியில் தற்கொலையின் எல்லைக்குச் செல்வேன். காது மடல்களில் காத்திருந்து கலகலப்பூட்டும்; என் குழந்தைகளின் “அப்பா” என்ற குரல் தூக்குக் கயிற்;றில் இட்ட முடிச்சிகளை அவிழ்க்கும். வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் இப்படி ஒரு மனயுத்தம்.

அப்போது அறிமுகமானார் ஆன்டனி என்ற சகோதரர். அவர் எனது இதயப்புண்களுக்கு இயேசுவின் கதைகளால் களிம்பு தடவினார். “இது துன்பங்கள் வரும் போது மனித மனத்தில் ஏற்படும் ஒருவிதத் தனிமை உணர்வு”. தனக்கு என்ன நிகழப் போகிறது என்பதை அறிந்த இயேசு கூடக் கடைசி; நேரத்தில் மனக்கலக்கம் அடைந்தார். “அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்” (மத் 26 -37).

“இவற்றிற்கு இவர் ஒருவரால் மட்டுமே விடுதலை தர முடியும் என்று சொல்லி இந்த மரியன்னையைக் காட்டினார். எனது வேண்டுதல் படிவங்கள் மரியன்னையின் பாதத்தைச் சேரத் தொடங்கியதும் என் பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்மாகப் பிடரி குலுக்கி பின்வாங்கியது. நரம்புகளில் இரத்த அணுக்களோடு தன்னம்பிக்கையும் ஊறத் துவங்கியது.” என்று மகிழ்வோடு தன் கதையை நிறுத்தினார் இராஜேந்தரன்.

நானும், மரியன்னை எனக்குச் செய்த நன்மைகளை நன்றியோடு நினைத்து கெபியைப் பார்த்தேன். அங்கு “அம்மா” என்றழைத்து வருவோரை புன்னகையோடு ஆசீர்வதித்துக் கொண்டிருந்தாள் மரியன்னை.