ஏதேனுக்கு வெளியே நெற்றி வியர்வை சிந்த ஆதாம் உழைத்தானே அந்த அனுபவமல்ல, ஏதேனுக்குள்ளே குளிர்ச்சியான வேளையில் தேவனோடு உலவினானே, அந்த அனுபவமே ஜெபம்!
ஜெபம் என்பது உழைக்கும் அனுபவமல்ல, உறவாடும் அனுபவம். புதிய ஏற்பாட்டு ஆசீர்வாதங்கள் எதுவும் உழைப்பின் வழியாக நமக்கு வருவதில்லை, பிள்ளை எனும் உரிமை வழியாகவே வருகிறது!
“கேளுங்கள்” என்று இயேசு சொன்னதன் பொருள் “கேட்டு கதறுங்கள்” என்பதல்ல, கேட்கும் உரிமை பெற்று விட்டதால் கவலைகெளையெல்லாம் உதறுங்கள் என்பதே!
ஜெபம் என்பது தேவனை உலுக்குவதல்ல, அவரை உயர்த்துவது. அவரை இணங்க வைப்பதல்ல, அவரோடு இசைந்திருப்பது!
“ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது” என்று சொல்லிவிட்டு இயேசு கெத்சேமனேயின் மாதிரியைக் காட்டவில்லை, மாறாக “பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே…” என்று உறவோடு தொடங்கும், சிறுபிள்ளைக்கு கூட எளிதான ஜெபத்தையே கற்றுக் கொடுத்தார்.
சாத்தானின் சிண்டைப் பிடித்து அவனோடு மல்லுக்கட்டி உருளும் அனுபவமும் அல்ல ஜெபம், அவன் மண்டை நசுக்கப்பட்டதை அவனுக்கு நினைப்பூட்டி வெற்றி முழக்கமிடும் அனுபவமே ஜெபம்.
செடியோடு ஒட்டப்பட்ட திராட்சைக் கிளைக்கு, செடியின் சாரத்தைப் பெற உழைக்கும் அவசியம் இல்லை, செடியின் வேருக்கும் சாருக்கும் அது பங்காளி!
ஜெபத்தின் வழியாய் வருவதல்ல ஜெயம், இயேசு பெற்ற ஜெயத்தின் வழியாக நாம் பெற்ற உரிமைதான் ஜெபம். இல்லாவிட்டால் காணியாட்சிக்கு புறம்பான புறஜாதியானுக்கு தேவனுடைய வீட்டில் பங்கேது?
ஜெபத்தை உழைப்பாக நினைத்தால் சில நிமிடங்கள் ஜெபிப்பதுகூட வலிக்கும்! உறவாக நினைத்துப் பாருங்கள் விடியவிடிய ஜெபித்தாலும் இனிக்கும்!
சகோ.ஜெயராஜ் விஜய்குமார்