தூய அமலோற்பவ அன்னை பேராலயம் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் ஆகும். இது புதுச்சேரி நகரில் அமைந்துள்ளது. முதலில் திருத்தூதர் பவுலின் பெயரால் அர்ப்பனிக்கப்பட்டிருந்ததால் இக்கோவில் பிரெஞ்சு மொழியில் சான் பவுல் (san paul) கோவில் என எழைக்கப்பட்டு, அது பின்னர் தமிழில் மறுவி சம்பா கோவில் என அழைக்கப்படுகின்றது. இக்கோவில் இப்போது இயேசுவின் அன்னையாம் தூய கன்னி மரியாவின் அமலோற்பவ அன்னை என்னும் பெயரின்கீழ் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இயேசு சபை குருக்கள் அப்போது பிரெஞ்சு குடியேற்ற நாடாக இருந்த புதுச்சேரிக்கு மறைப்பணியாற்ற 1689இல் வந்தனர். பிரான்சின் பதினான்காம் லூயி மன்னரிடம் நிதியுதவிப்பெற்று 1692ஆம் ஆண்டு அப்போதைய பிரெஞ்சுக்கோட்டைக்கு மேற்கில் ஒரு ஆலயம் எழுப்பினர். அது மறு ஆண்டே இடச்சுக்காரர்களின் படையெடுப்பால் இடிக்கப்பட்டது. இரண்டாம் கோவில் 1699இல் கட்டப்பட்டாலும், அதுவும் நிலைக்கவில்லை. 1728 முதல் 1736வரை தற்போதையக்கோவில் இருக்கும் இடத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டது. 1761இல் இது ஆங்கிலேயர்களால் ஏழாண்டுப் போரின் போது இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
1765ஆம் ஆண்டு இப்போது உள்ள நான்காம் ஆலயம் கட்டப்பட்டது. 20 ஜூன் 1791 ஆம் நாள் ஆலய வேலைகள் முடிந்து ஆயர் செம்பெனோயிஸால் இவ்வலயம் அருட்பொழிவு செய்யப்பட்டது. ஆலய மணி கோபுரம் பின்னாளில் கட்டப்பட்டது. 1905ஆம் ஆண்டு இடப்பக்க விரிவாக்கப் சேர்க்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு ஆலய மைய பீடம் சீரமைக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஆலய முகப்பில் உள்ள இடம் சீரமைக்கப்பட்டது.
இவ்வலய விழா அமலோற்பவ அன்னையின் விழாவாகிய டிசம்பர் 8 அன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.
இவ்வாலயம் புதுச்சேரியின் குறிக்கத்தக்க சுற்றுலா மையமாகும்.