குழந்தைகள், வருங்காலத்திற்கு…..

0
3481
குடும்பங்களோடு உடனிருந்து மறைப்பணியாற்றுமாறு திருஅவையைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பெருந்தொற்று உருவாக்கியுள்ள தனிமை, வாடகைத் தாய்மார், இழிபொருள் இலக்கியம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்
 

திருத்தந்தை: குழந்தைகள், வருங்காலத்திற்கு இன்றியமையாத வளங்கள்

இக்காலக்கட்டத்தில் ஐரோப்பா, குறிப்பாக, ஐரோப்பியக் குடும்பங்கள், உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரினால் கடுந்துயரங்களை எதிர்கொண்டு வருகின்றன என்று, ஜூன் 10, இவ்வெள்ளியன்று தான் சந்தித்த ஐரோப்பிய கத்தோலிக்க குடும்பங்கள் கழகங்களின் கூட்டமைப்பினரிடம் (FAFCE) கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இக்கூட்டமைப்பின் 130 பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘அனைத்து நாடுகளின் தாய்மாரும், தந்தையரும் போரை விரும்பவில்லை, குடும்பம், அமைதியின் கல்விக்கூடம்’ என்ற இக்கூட்டமைப்பின் அறிவிப்பை தான் முழுமனதோடு ஏற்பதாகத் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில நாள்களிலேயே உரோம் மாநகரில் குடும்பங்களின் பத்தாவது உலக மாநாடு நடைபெறவிருப்பதை முன்னிட்டு, பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை நடத்திய கருத்தரங்கில் இப்பிரதிநிதிகள் கலந்துகொண்டதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, மாற்றத்தின் காலத்தில் மட்டுமல்ல, சகாப்தத்தின் மாற்றத்திலே நாம் வாழ்ந்து வருகிறோம் என்று எடுத்துரைத்தார்.

இக்கூட்டமைப்பு, உக்ரைன் நாட்டுப் புலம்பெயர்ந்தோரை வரவேற்பதற்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரிவினையை உருவாக்குவதில் அல்ல, மாறாக, ஒன்றிணைக்கும் செயல்களில் கவனம் செலுத்தி, அமைதிக்காக உழைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

குழந்தை பிறப்பு விகிதம்

ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து இக்கூட்டமைப்பினர் கவனம் செலுத்தி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, குழந்தை பிறப்பு அதிகரிப்பு மற்றும், பெற்றோருக்கு ஆதரவு, வேலைவாய்ப்பை, குறிப்பாக பெண்கள் மத்தியில் வேலைவாய்ப்பை ஊக்குவித்தல் ஆகிய குடும்பத்தை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுமாறு ஊக்கப்படுத்தினார். குழந்தைகளைக் கொண்டிருப்பது, படைப்புமீது பொறுப்புணர்வு குறைவதாக நோக்கப்படக் கூடாது என்றும் உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

இழிபொருள் இலக்கியங்கள்

இன்று ஒன்றோடொன்று தொடர்புடைய சவால்கள் பெரிய அளவில் உள்ளன என்றும், தலைமுறைகளுக்கு இடையே ஒருமைப்பாட்டுணர்வு இல்லாமல் எவரும் நீடித்த நிலையான வளர்ச்சி பற்றி பேச இயலாது என்றும் உரைத்த திருத்தந்தை, இணையதளம் வழியாக எல்லா இடங்களிலும் பரவிவரும் பாலுணர்வைத் தூண்டும் செய்திகள் இலக்கியங்கள் மற்றும் படங்கள் ஆகியவை மனிதரின் மாண்பைத் தாக்கி வருகின்றன என்று கவலை தெரிவித்துள்ளார்.

உலகில் பரவிவரும் மனிதமற்ற ‘வாடகைத் தாய்மார்’ நடவடிக்கைகளும் ஆண்கள் மற்றும், பெண்களின் மாண்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன எனவும், இவற்றில் ஈடுபடுத்தப்படுவது பெரும்பாலும் ஏழைப் பெண்கள் எனவும், குழந்தைகள் விற்பனைப் பொருளாக நடத்தப்படுகின்றனர் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேலும் கவலை தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள தனிமை பிரச்சனை பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை, குட்டித் திருஅவைகளான குடும்பங்களில் பல, இந்த தனிமையை எதிர்கொள்கின்றன என்றும், இத்தகைய குடும்பங்கள் தனித்துவிடப்படாமல், திருஅவை அவற்றோடு உடன்பயணிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஒரு குடும்பம், மற்றவரை, குறிப்பாக, ஏழைகள் மற்றும், கைவிடப்பட்டோரை வரவேற்கும்போது அது, திருஅவையின் தாய்மைப் பண்பில் பங்குகொள்வதற்குச் சான்றாக உள்ளது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கூட்டமைப்பினரின் பணிகளைப் பாராட்டி ஆசிர்வதித்தார்.