இன்று நாம் மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இப்பெருவிழா இறைவனின் ஒன்றிப்பை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூன்று ஆட்களும் அன்பை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றனர். படைத்தல், மீட்டல், காத்தல் ஆகிய முப்பெரும் செயல்கள் இவர்களிடத்தில் காணப்படுகின்றன. தந்தை இவ்வுலகைப் படைக்கின்றார், மகன் இவ்வுலகை மீட்கின்றார், ஆவியானவர் மீட்கப்பட்ட உலகைப் பாதுகாக்கின்றார். மூன்று ஆட்களுக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே இறையியல்பு இருப்பதால் ஒன்றிப்பு நிலவுகிறது என்று சிறுவயதிலேயே சின்னக் குறிப்பிடம் வழியாக நமக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. எப்படி மூவொரு இறைவன் என்று கேட்பதைவிட, ஏன், எதற்காக மூவொரு இறைவன் என்று நம் ஞானத்தால் அதாவது, இறைநம்பிக்கையால் கேட்பது நல்லது. எப்படி மூவொரு இறைவன் என்று கேட்பது அறிவு சார்ந்தது. நம்மை மீட்பதற்காகவே மூன்று ஆட்களும் ஒரே கடவுளாய் இணைந்திருக்கிறார்கள் என்று இறைநம்பிக்கையில் ஏற்றுக்கொள்வது நமது ஞானத்தின் வெளிப்பாடாக அமைகிறது. இதைத்தான் இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. இறைவனே ஞானமாகவும் வெளிப்படுகிறார்.
இறைவனின் ஞானம் கூறுவது, ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே, தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப்படைத்தார். தொடக்கத்தில், பூவுலகு உண்டாகு முன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப் பெற்றேன். கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன். அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல்மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன். வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்த போது, நான் அங்கே இருந்தேன். உயரத்தில் மேகங்களை அவர் அமைத்த போது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன். (நீமொ 8:22-28).
நாம் அறிவுகொண்டு எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாது. இன்று வரை நம்மில் பலர் இந்த மூவொரு இறைவன் கருத்தியலை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். இது ஒரு புரியாத புதிராகவே இன்றுவரை நீடிக்கிறது. இதைத்தான் மறைபொருள் என்கின்றோம். மெத்த படித்த புனித அகுதிஸ்னாரும் கூட இந்த மறைபொருளைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினார். பல நேரங்களில் இந்த மூவொரு இறைவன் கருத்தியலை படிக்காதவர்களைக் காட்டிலும் படித்தவர்களே புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். காரணம், படித்தவர்களிடம் இருப்பது அறிவுத் தேடல். படிக்காதவர்களிடம் இருப்பது விசுவாசத் தேடல்.
ஒருமுறை கிளைகிராமம் ஒன்றில் மூவொரு இறைவன் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றுவதற்காகப் பங்குத்தந்தை வயல்வழியே நடந்து போய்க்கொண்டிருந்தார். இதனை எப்படி மக்களுக்கு விளக்கிச் சொல்வது, அப்படியே விளக்கிச் சொன்னாலும் அதை எப்படி அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றெல்லாம் சிந்தித்தவாறே சென்றுகொண்டிருந்தார். அப்போது மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி ஒருவர், “என்ன சாமி, தீவிரமா யோசித்துக்கொண்டே போறீங்க” என்று பங்குத் தந்தையைப் பார்த்துக் கேட்டார். “இன்று மூவொரு இறைவன் பெருவிழா, அதைப்பற்றி மக்களுக்கு எப்படி புரிய வைப்பதுன்னு தெரியல, அதான் சிந்திச்சுக்கிட்டே போறேன். மனசுலே ஒரே குழப்பமா இருக்கு” என்றார் பங்குத்தந்தை. “இதுல என்ன சாமி குழப்பம்? இத பாருங்க, இந்த சிவப்புக் கலர் பசுமாடு, பச்சை கலர் புல்லைத் தின்னுட்டு வெள்ளை கலர் பாலைக் கொடுக்குது.” அவ்வளவுதான். இதுல, சிவப்பு கலர் பசுமாடு தந்தை, பச்சை கலர் புல்லு இயேசு, வெள்ளை கலர் பாலு தூய ஆவி. பசுமாடு, புல்லு, பால் ஆகிய மூன்றுக்கும் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கோ அதுமாதிரி இந்தத் தந்தை, மகன், தூய ஆவி மூன்று பேருமே ஒருவருக்கொருவர் தொடர்புடையவங்க என்று ரொம்ப சுலபமா சொல்லுங்க சாமி, மக்கள் புரிஞ்சுக்குவாங்க… என்று அந்த மாடு மேய்ப்பவர் ஒரு போடு போட்டார். அவ்வளவுதான்… பங்கு சாமியார் அப்படியே பொறி கலங்கி போனார். பல நேரங்களில் பாமர மக்களிடம் இருக்கும் இறைஞானம் கூட படித்தவர்களிடம் இருப்பதில்லை என்பது எவ்வளவு உண்மை!
இரண்டாவதாக, மூவொரு இறைவன் பெருவிழா நமக்கு உணர்த்தும் முக்கியமான கருத்து ஒன்றிப்பு. தந்தை, மகன், தூய ஆவியார் ஆகி மூவரும் மூன்று ஆட்களாய் இருந்தாலும் எல்லாவற்றிலும் ஒரே கடவுளாய் ஒன்றிந்திருக்கின்றனர். இதைத்தான் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை என்று கேட்டோம். திருவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் இரண்டு இடங்களில் மூவொரு இறைவனின் பிரசன்னத்தைப் பார்க்கிறோம். முதலாவதாக, இயேசுவின் திருமுழுக்கின்போது மூவொரு இறைவனின் பிரசன்னம் வெளிப்படுகிறது. அப்போது தந்தை தனது அன்புமகனை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்து வைப்பதில் பூரிப்படைகின்றார். அனைத்து மக்களையும் ஒன்றிக்கும் விதமாக இவரது பணிவாழ்வு இருக்கும் என்பதை இவ்வுலக மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது (மத் 3:16-17). இரண்டாவதாக, உருமாற்ற நிகழ்வின்போது மூவொரு இறைவனின் பிரசன்னத்தைப் பார்க்கின்றோம். “அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. (மாற் 9:7). இந்நிகழ்வில் இறைத்தந்தை, தனது அன்பு மகனின் தியாக மரணத்தை குறித்து உலக மக்களிடம் மீண்டும் உறுதிப்படுத்துகின்றார். ஆக, இவ்விரண்டு இடங்களிலும் மூவொரு இறைவனின் பிரசன்னம் வெளிப்படுவதையும், பாவத்தில் உழன்றுபோயிருந்த இவ்வுலகை மீட்பதில் தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூவரும் ஒன்றிணைந்து செயல்படுவதையும் காண முடிகிறது. மேலும் மூவொரு இறைவனை முக்கோண வடிவத்தில் அடையாளப்படுத்துகிறோம். அதாவது முக்கோணத்திலுள்ள மூன்று பக்கங்களும் சம அளவில் ஒன்றோடு ஒன்று பிணைந்து இணைந்திருக்கும். அதுபோலவே மூவொரு இறைவனும் எல்லாவற்றிலும் சம அளவில் இணைந்துள்ளனர்.
அது ஒரு மிகப்பெரிய கிராமம். அதில் பல்வேறு இனத்தவரும் மொழியினரும் வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாக அவர்களிடத்தில் பல்வேறும் பிரிவுகளும் பிணக்குகளும் நிலவின. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவர்களிடத்தில் வேற்றுமைகளும், சண்டை சச்சரவுகளும் வளர்ந்துகொண்டே வந்தன. அதேகிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பம். அக்குடும்பத்தின் தந்தை மிகவும் நல்ல மனிதர். அவருக்கு இரண்டு ஆண் குழந்ததைகள் இரண்டாவது குழந்தை பிறந்த சில நாட்களிலேயே அவரின் மனைவி இறந்துவிட்ட நிலையில், தாய்க்குத் தாயாக இருந்து அந்த இரண்டு ஆண் குழந்தைகளையும் அவரே மிகவும் பொறுப்பாக வளர்த்து வந்தார். அக்குழந்தைகள் வளரும்போதே நற்குணங்களையும் கற்றுக்கொடுத்தார். குறிப்பாக தனது நலனைக் காட்டிலும் பிறர் நலனுக்காகவும் இந்தச் சமுதாயத்தின் நலனுக்காகவும் நம் வாழ்வையே அர்ப்பணிக்க வேண்டும் என்ற உயர்த்த விழுமியத்தையும் சொல்லிக் கொடுத்தார். அவர்கள் வளர்ந்து சிம்சோனைப் போல தெய்வபயமும், வலிமையும், சமுதாய அக்கறையும் ஒருங்கேபெற்ற இளையோராக அக்கிராமத்தில் வலம் வந்தனர். அங்கே நிலவிய வேறுபாடுகளும் மாறுபாடுகளும் தான் அந்தக் கிராமத்தின் வளர்ச்சிக்குத் தடைகளாக இருக்கின்றன என்பதை அறிந்த மூத்த மகன் எல்லா இனத்தவரிடமிருந்தும் தன்னையொத்த இளையோரைத் தெரிவு செய்து, அவர்களுக்கு விழிப்புணர்வூட்டி அக்கிராமத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடத் தொடங்கினார். அவர்களின் செயல்படுகள் அக்கிரமத்திலுள்ள பலருக்கு மகிழ்ச்சியைத் தந்தன.
தனது மூத்த மகனின் தன்னலமற்ற தியாகச் சேவைகளை எண்ணி உளம் பூரித்தார் தந்தை. ஆனால் அவரின் மகிழ்ச்சி நீடித்து நிலைக்கவில்லை. காரணம், அக்கிராமத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்த பணக்காரர்கள் ஒன்று திரண்டு அவனுக்கெதிராய் சூழ்ச்சிகளை அரகேற்றி, பல கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். காலங்காலமாய் தங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அவ்வூரின் அதிகார நாற்காலியில் அமரவேண்டும் என்பதற்காகத் திட்டங்கள் தீட்டி கூலிப்படையினரை ஏவி அந்த நல்ல தந்தையின் மூத்த மகனை கொன்றுபோட்டனர். செய்வதறியாது திகைத்த அவனின் நல்ல நண்பர்கள் அனைவரும் திசைக்கொருவராய் சிதறுண்டு போனார்கள். நடப்பதைக் கண்டு நாசவேலை செய்தவர்கள் நகைத்தார்கள். ஊரினை ஒன்றிணைக்கத் திட்டமிட்ட தன் அன்பு மகனின் ஆசை நிறைவேறவில்லையே என்று வருந்தினார் அந்தத் தந்தை. அப்போது புயலாய்ப் புறப்பட்டு வந்தான் இளைய மகன்.“அப்பா கவலை வேண்டாம் உங்களுக்கு. அண்ணன் விட்டுச்சென்ற அன்புப் பணியை நான் தொடர்கிறேன்”என்று கூறி விட்டு சிதறுண்டு போன தன் அண்ணனின் நல்ல நண்பர்களைத் தேடி ஓடினார். மூத்தவனைக் கொன்றுவிட்டால் தந்தை பின்வாங்கிவிடுவார், இளைய மகனும் அரண்டுபோய் ஓடிவிடுவார் என்று தப்புக்கணக்குப் போட்ட அவ்வூர் சதிகாரர்களின் சதித்திட்டங்கள் தவிடுபொடி ஆயின. தந்தை-மூத்தமகன்-இளைய மகன் என்ற அந்த மூவர் கூட்டணி ஒத்த சிந்தனையும், ஒருமித்த தியாக மனமும் கொண்டு ஒரு புதிய சமுதாயத்தை நோக்கிய பாதையில் அப்பெரும் கிராமத்தை மீண்டும் புறப்படச் செய்தது. இக்கதையில் வரும் தந்தை மகன்களைப்போல, தீமைகளும் பாவங்களும் நிறைந்த இவ்வுலகை மீட்க மூவொரு இறைவன் நிகழ்த்திய தியாகம்நிறை செயல்களை நம்மால் மறந்துவிட முடியாது.
இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில், “ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; எனெனில், நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது” (உரோ 5:3-5) என்கிறார் புனித பவுலடியார். பிறர்நலன் சார்ந்த நற்செயல்களில் நம்மையே நாம் கரைத்துக்கொள்ளும்போது, நாம் பயணம் மேற்கொள்ளும் பாதைகளில் எத்தனை தடைக்கற்கள் குறுக்கிட்டாலும் அவைகள் ஒருபோதும் நமக்கு ஏமாற்றத்தைத் தராது என்பதையும் உணர்வோம். ஆகவே நமது அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றி வாழும் எண்ணற்ற துயருறும் மக்களை அவர்கள் வாழும் தீமைநிறை உலகிலிருந்து மீட்க நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதை மூவொரு இறைவனின் பெருவிழா நமக்கு தெளிவுபடுத்துகிறது. இதனை நன்கு புரிந்துகொண்டு செயல்பட இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.
Courtesy :Vatican News