தூய ஆவியார் நவநாள்

0
6319

ஆண்டவரின் விண்ணேற்பு வியாழனுக்கு அடுத்த நாள் (வெள்ளி) முதல் தூய ஆவியாரின் பெருவிழாவுக்கு முந்திய நாள் (சனி) வரை சொல்ல வேண்டியது.

தொடக்கப் பாடல்

ஓ பரிசுத்த ஆவியே! என் ஆன்மாவின் ஆன்மாவே,
உம்மை ஆராதனை செய்கிறேன், இறைவா, ஆராதனை செய்கிறேன்

என்னை ஒளிரச் செய்து வழி காட்டும், புது வலுவுட்டி என்னைத் தேற்றும்,
என் கடமை என்னவென்றுக் காட்டும், அதைக் கருத்தாய் புரிந்திடத் தூண்டும்,
என்ன நேர்ந்தாலும் நன்றித் துதி பாடிப், பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுள்ளப்படி என்னை நடத்தும்.

இறை தந்தையின் முகத்தைக் காட்டும் இயேசு கிறிஸ்துவின் அறிவை ஊட்டும்
இறை வார்த்தையை விளங்க வையும் நற்செய்தியை முழங்கச் செய்யும்
என்ன நேர்ந்தாலும் நன்றித் துதி பாடிப் பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுள்ளப்படி என்னை நடத்தும்

தொடக்க செபம்

முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே…
எல்: ஆமென்.

முத: தூய ஆவியே, எங்கள் ஆருயிரே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். எங்களில் ஒளியேற்றி எங்களை வழி நடத்தியருளும். எங்களுக்குத் திடம் அளித்து எங்களைத் தேற்றியருளும். நாங்கள் செய்ய வேண்டியவற்றை எங்களுக்குச் சொல்லி ஆணையிடும். உமது திட்டத்தை எங்களுக்குத் தெரியப்படுத்தினால் போதும். எப்படி நாங்கள் நடக்க வேண்டுமென்று நீர் விரும்புவதை நாங்கள் அன்புடன் ஏற்று அடிபணிகிறோம்.
எல்: ஆமென்.


தூய ஆவியாரால் நிரப்பப்படச் செபம்

‘நீங்கள் மனம் மாறுங்கள், உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெருவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். (திருத்தூதர் பணிகள் 2:38) என்பது புனித பேதுருவின் அறிவுரை. எனவே தூய ஆவியார் நம்மில் நிரம்ப வேண்டுமெனில் நாம்:
1. நம் பாவங்களுக்காக மனத்துயரடைய வேண்டும்.
2. இயேசு கிறிஸ்துவை நம் ஒரே மீட்பராக ஏற்க வேண்டும்.
3. தூய ஆவியார் நம்மை நிரப்ப உருக்கமாகக் கெஞ்சி மன்றாட வேண்டும்

(இந்த செபத்தை தினமும் 20 நிமிடங்கள் மீண்டும் மீண்டும்மனப்பற்றுதலுடன் தூய ஆவியாரை நோக்கி செபிக்கவும்)

எல்: என்றும் வாழும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே, எங்கள் அன்பு இயேசுவே, நீர் வாக்களித்த தூய ஆவியாரை எங்கள் மீது அனுப்பியருளும். உம் தூய ஆவியாரின் கனிகளையும், கொடைகளையும், அருங்கொடைகளையும் எங்களுக்கு அருளி எங்களைப் புதிய படைப்பாக மாற்றியருளும். இயேசுவே, உமக்கு நன்றி! இயேசுவே உமக்குப் புகழ்! விண்ணுலகத் தந்தையே, எங்கள் மீது உம் தூய ஆவியாரைப் பொழிந்தருளும். நன்றி தந்தையே, என்றும் புகழ் உமக்கே. ஆமென்.

முத: மூவொரு இறைவா, உம்மைத் ஆராதிக்கிறோம்.
எல்: அனைத்திற்கும் முழு முதல் பொருள் நீரே.

முத: இறைவா, உம்மை விசுவசிக்கிறோம்.
எல்: என்றும் மாறாத நிலையான உண்மை நீரே.

முத: இறைவா, உம்மை நம்புகிறோம்.
எல்: எல்லையற்ற இரக்கமும், நிறை ஆற்றலும் கொண்டவர் நீரே.

முத: இறைவா உம்மை அன்பு செய்கிறோம்.
எல்: அளவற்ற நன்மையும் அன்பும் கொண்டவர் நீரே.

முத: அன்புத் தந்தையே, உம் தூய ஆவியாரை அனுப்பியருளும்.
எல்: அவர் எங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவராக.

முத: இனிய இயேசுவே, உம் தூய ஆவியாரை அனுப்பியருளும்.
எல்: அனைத்திலும் நாங்கள் இறைவனை மாட்சிப்படுத்துவோமாக.

முத: தூய ஆவியே எம்மில் எழுந்தருளி வாரும்! உம்முடைய இறைமக்களின் உள்ளங்களை நிரப்பியருளும். உம் அன்புத் தீயால் எங்களின் உள்ளத்தைப் பற்றி எரியச் செய்தருளும்.
எல்: உம்முடைய ஞானக்கதிர்களை வரவிடுவீர். அதனால் உலகைப் புதுப்பிப்பீர்.

முத: செபிப்போமாக! எல்லாம் வல்ல இறைவா! உம் மக்களின் உள்ளங்களைத் தூய ஆவியின் ஒளியால் தெளிவுப்படுத்தினீரே. அந்தத் தூய ஆவியின் ஒளியால் நாங்கள் சரியானவற்றை உணரவும், அவருடைய ஆறுதலால் மகிழ்ச்சி பெறவும் அருள்புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.


தூய ஆவியாரின் புகழ்மாலை

முத: ஆண்டவரே இரக்கமாயிரும்…
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்…
எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்…
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.

முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்
முத: விண்ணகத் தந்தையாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: உலகை மீட்ட திருமகனாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: தூய ஆவியாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: மூவொரு கடவுளாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

(கீழுள்ள புகழுக்குப் பதிலுரையாக எங்கள் மேல் இரக்கமாயிரும் அல்லது எங்களைத் திடப்படுத்தியருளும் அல்லது எங்களில் செயலாற்றும் என்று சொல்லவும்)

முத: தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் தூய ஆவியாரே…
முத: தந்தைக்கும் மகனுக்கும் இணையான தூய ஆவியாரே…
முத: தந்தையாகிய இறைவன் வாக்களித்த தூய ஆவியாரே…
முத: விண்ணக ஒளியின் கதிரான தூய ஆவியாரே…
முத: எல்லா நன்மைகளுக்கும் தொடக்கமாகிய தூய ஆவியாரே…
முத: விண்ணகத் தண்ணீரின் ஊற்றாகிய தூய ஆவியாரே…
முத: சுட்டெரிக்கும் தீயாகிய தூய ஆவியாரே…
முத: பற்றி எரியும் அன்பாகிய தூய ஆவியாரே…
முத: இறைப்பொழிவாகிய தூய ஆவியாரே…
முத: உண்மையும் அன்பும் கொண்ட தூய ஆவியாரே…
முத: ஞானமும் புரிந்துணர்வும் தரும் தூய ஆவியாரே…|
முத: ஆலோசனையும் மனவலிமையும் தரும் தூய ஆவியாரே…
முத: அறிவும் இறை பக்தியும் தரும் தூய ஆவியாரே…
முத: தேவ பயம் தரும் தூய ஆவியாரே…
முத: அருளும் செபமும் தரும் தூய ஆவியாரே…
முத: தூய்மையையும், மாண்பையும் அருளும் தூய ஆவியாரே…
முத: ஆறுதல் அளிக்கும் தூய ஆவியாரே…
முத: தூய்மைப்படுத்துகிறவராகிய தூய ஆவியாரே…
முத: திரு அவையை வழிநடத்தும் தூய ஆவியாரே…
முத: உன்னதக் கடவுளின் திருக்கொடையாகிய தூய ஆவியாரே…
முத: உலகனைத்தையும் நிரப்பும் தூய ஆவியாரே…
முத: எங்களை இறை மக்களாக மாற்றும் தூய ஆவியாரே…
முத: பாவத்தின்மீது அச்சத்தையும் வெறுப்பையும் உண்டாக்கும் தூய ஆவியாரே…
முத: உலகின் முகத்தைப் புதுப்பிக்கும் தூய ஆவியாரே…
முத: எங்கள் ஆன்மாவில் ஒளி ஏற்றும் தூய ஆவியாரே…
முத: எங்கள் இதயங்களில் உம் சட்டத்தைப் பொறிக்கும் தூய ஆவியாரே…
முத: எங்கள் உள்ளங்களை உம் அன்புத் தீயால் ஒளிர்விக்கும் தூய ஆவியாரே…
முத: சரியாகச் செபிக்கக் கற்றுத்தரும் தூய ஆவியாரே…
முத: விண்ணகத் தூண்டுதல்களால் எங்களை ஊக்குவிக்கும் தூய ஆவியாரே…
முத: மீட்பின் வழியில் எங்களை வழிநடுத்தும் தூய ஆவியாரே…
முத: அவசியமான அறிவை மட்டும் தரும் தூய ஆவியாரே…
முத: வாழ்வு தரும் தண்ணீராகிய தூய ஆவியாரே…
முத: நீதியில் எம்மை நிலைத்திருக்கச் செய்யும் தூய ஆவியாரே…
முத: எங்களுக்காகப் பரிந்துரைக்கும் தூய ஆவியாரே…
முத: எங்களுக்கு நல்லவற்றை கற்பிக்கும் தூய ஆவியாரே…
முத: எங்களுக்கு எல்லா நற்பண்புகளை வழங்கும் தூய ஆவியாரே…
முத: எங்களுக்கு நீதியை நிலைநாட்டும் தூய ஆவியாரே…
முத: எங்களது நிலையான நித்தியக் கொடையான தூய ஆவியாரே…

முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
எல்: எங்கள் பாவங்களைப் மன்னித்தருளும்.
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: தூய ஆவியே எம்மில் எழுந்தருளி வாரும்! உம்முடைய இறைமக்களின் உள்ளங்களை நிரப்பியருளும். உம் அன்புத் தீயால் எங்களின் உள்ளத்தைப் பற்றி எரியச் செய்தருளும்.
எல்: உம்முடைய ஞானக்கதிர்களை வரவிடுவீர். அதனால் உலகைப் புதுப்பிப்பீர்.

முத: செபிப்போமாக! எங்கள் அடைக்கலமும் ஆறுதலுமாகிய இறைவா, உம்முடைய ஆவியால் எங்களை வழிநடத்துகின்றீர். உமது அருட்காவலில் நாங்கள் உயிர்வாழச் செய்கிறீர். எம்மீது இரங்கி, எங்கள் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும். உம்மையே நம்பியிருக்கும் எங்கள் விசுவாசம் மேன்மேலும் உறுதி பெருமாறு உம்முடைய ஆவியின் அருட்கொடைகளை எங்களுக்கு நிறைவாய்த் தந்து உதவியருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.


தூய ஆவியார் செபம்

(இரு குழுக்களாக மாறி மாறி பாடலாம்)

தூய ஆவியே எழுந்தருள்வீர்.
வானினின்று எமது பேரொளியின்,
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்.
நன்கொடை வள்ளலே வந்தருள்வீர்.
இருதய ஒளியே வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே,

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே,

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை.
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்.
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்.
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்.
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா, உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்கள் வழங்கிடுவீர்.
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்.
அழிவிலா இன்பம் அருள்வீரே. ஆமென்.


தூய ஆவியார் நவநாள் செபம்

(ஒன்பது நாள்களும் சொல்ல வேண்டும்)

ஓ தூய ஆவியாரே! எங்கள் இறைவா! நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உமது தெய்வீகத்தன்மையின்றி நாங்கள் ஒன்றுமில்லாதவர்கள், நீரின்றி எங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்;. வாரும் தேற்றரவாளரே, எளியோரின் தந்தையே, சிறந்த ஆறுதலளிப்பவரே, எங்களை அநாதைகளை விட்டு விடாத எங்கள் மீட்பரான இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதியை நிறைவேற்றுவீராக. பெந்தக்கோஸ்தே நாளன்று அன்னை மரியா மீதும், திருத்தூதர்கள் மீதும் இறங்கி வந்ததைப் போல, உமது தகுதியற்ற படைப்பாகிய ஏழைகள் எங்கள் மீதும் இறங்கி, எங்கள் உள்ளத்தையும் இதயத்தையும் நிரப்புவீராக. மிக அற்புதமாகவும், மிகுந்த இரக்கத்தோடும், தாராள மனத்தோடும் நீர் அன்று அவர்களுக்கு வழங்கிய அதே கொடைகளை இன்று எங்களுக்கும் வழங்குவீராக. உமக்கு வருத்தமளிக்கும் செயல்கள் அனைத்தையும் எங்கள் இதயத்திலிருந்து எடுத்துவிட்டு, அதை உமக்குத் தகுந்த உறைவிடமாக மாற்றுவீராக. நித்திய பேறுபலன்களை நாங்கள் காணவும், புரிந்து கொள்ளவும் எங்கள் மனதை ஒளிரச் செய்வீராக. எல்லாவற்றிற்கும் மேலாக எங்களிடமுள்ள தகுதியற்ற பிணைப்புகளைக் அகற்றி, எங்கள் இதயத்தை உம் அன்பால் பற்றி எரியச் செய்து, எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்கள் ஆண்டவராகிய இயேசுவில் மறைந்திருக்கச் செய்வீராக. இறைவனின் திருவுளத்தின்படி நாங்கள் நடந்து, தூய ஆவியாரின் துண்டுதலால் வழிநடத்தப்பட எங்கள் சிந்தையை திடப்படுத்துவீராக. இயேசு கிறிஸ்து தமது மண்ணுலக வாழ்வில் கடைப்பிடித்துக் கற்றுக்கொடுத்த தாழ்ச்சி, வறுமை, கீழ்ப்படிதல், இவ்வுலக அலட்சியம் ஆகிய தெய்வீகப் படிப்பினைகளை நாங்களும் கடைப்பிடிக்க உமது அருளினால் எங்களுக்கு உதவுவீராக.

ஓ ஆறுதலளிக்கும் தூய ஆவியாரே! மிகுந்த நம்பிக்கையுடன் எங்கள் கடமைகளை நிறைவேற்றவும், எங்களது அன்றாடச் சிலுவைகளை நாங்கள் பொறுமையுடன் சுமக்கவும், இறைவனின் திருவுளத்தை நாங்கள் முழுமையாக நிறைவேற்றவும், வானத்தைத் திறந்து வெண்புறாவாக எங்கள் மேல் இறங்கி வருவீராக. அன்பின் ஆவியாரே! தூய்மையின் ஆவியாரே! அமைதியின் ஆவியாரே! என் ஆன்மாவை மேன்மேலும் தூய்மையாக்கும். இந்த உலகம் தர முடியாத அந்த விண்ணக அமைதியை எங்களுக்குத் தருவீராக. உமது இறையரசு இந்த உலகெங்கும் பரவிட அயராது உழைக்கும் எங்கள் திருஅவையையும், எங்கள் திருத்தந்தையையும், ஆயர்களையும், திருப்பணியாளர்களையும், துறவறத்தார் அனைவரையும், இறை மக்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பி ஆசீர்வதியும்.

ஓ தூய ஆவியாரே! எல்லா நல்லவற்றையும் முழுமையாக அளிப்பவரே! இந்த நவநாள் வழியாக நான் வேண்டும் அனைத்தையும் அருள்வீராக. என்னிலும், என் வழியாகவும் உமது திருவுளம் நிறைவேறுவதாக. நீர் என்றென்றும் புகழப்படவும் மாட்சிப்படவும் தகுந்தவர். ஆமென்.


தூய ஆவியார் நவநாள் சிறப்பு செபம்

முதல் நாள்
தூய ஆவியே எழுந்தருள்வீர்,
வானினின்று உமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

வாசகம்: உரோமையர் 8 : 18 – 23, 26

தூய ஆவியார்:
நிலைவாழ்வு மட்டுமே நமக்கு முக்கியமான ஒன்று. பாவத்திற்கு மட்டுமே நாம் பயப்பட வேண்டும். அறியாமை, பலவீனம், அலட்சியம் ஆகியவற்றின் விளைவே பாவம். தூய ஆவியார் – ஒளியின் ஆவி, வலிமையின் ஆவி, அன்பின் ஆவி. அவரது ஏழு கொடைகளால் அவர் நம் மனதை விழிப்பூட்டுகிறார், நம் சிந்தனையை வலுப்படுத்துகிறார், நம் இதயத்தை கடவுளின் அன்பால் பற்றி எரியச் செய்கிறார், நம் மீட்பை உறுதிப்படுத்த நாம் தினந்தோறும் கடவுளின் ஆவியாரைத் தூண்டி எழுப்ப வேண்டும், ஏனெனில் ‘பலவீனத்தின் உதவி அவரே”. நாம் எதற்காக செபிக்க வேண்டுமென்று நாமே அறியாதிருக்கிறோம். தூய ஆவியாரே நமக்காக செபிக்கிறார்.

செபம்:
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனே, தண்ணீரினாலும் தூய ஆவியாராலும் எங்களை மீண்டும் உயிர்ப்பிக்க வல்லவரே, எங்களது எல்லா பாவங்களையும் மன்னித்தவரே, விண்ணகத்திலிருந்து உமது ஏழு கொடைகளான ஞானத்தின் ஆவி, புரிந்துணர்வின் ஆவி, ஆலோசனையின் ஆவி, மனவலிமையின் ஆவி, அறிவின் ஆவி, இறை பக்தியின் ஆவி, தேவ பயத்தின் ஆவி ஆகியவற்றை எங்கள் மேல் நிறைவாகப் பொழிந்தருளும். ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்


இரண்டாம் நாள்
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்! நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்!
வாழ்வோரின் இருதய ஒளியே வந்தருள்வீர்.

வாசகம்: யோவான் 14 : 15 – 17, 26 – 27

தேவ பயம் என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் தேவ பயம் என்னும் கொடை, நாம் கடவுள் மீது இறையாண்மை கொண்ட மரியாதை கொள்ள நம்மை நிரப்பி, நமது கொடிய பாவத்தினால் நாம் கடவுளுக்கு எவ்வித வருத்தமும் விளைவிக்காமல் இருக்கச் செய்கிறது. இது, நமது சிந்தனையிலிருக்கும் நரகத்தைப் பற்றிய பயமல்ல. நமது விண்ணகத் தந்தையின் மேலுள்ள இறை பக்தியின் உணர்வினாலும் நாம் அவரது பிள்ளைகள் என்ற மரியாதையினாலும் எழுகின்ற பயம். இதுவே நம்மை இவ்வுலகச் சிற்றின்பங்களிலிருந்து பிரித்து, எவ்விதத்திலும் கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்க முடியாது என்ற நமது ஞானத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் பயம். ‘கடவுளுக்கு பயப்படுவோர் தங்கள் இதயத்தைத் திடப்படுத்தி, அவருடைய கண்களுக்கு முன்பாகத் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வர்.”

செபம்:
ஓ தெய்வீகத் தேவ பயத்தின் ஆவியாரே வாரும். வந்து என் உள்மனதை ஊடுருவி, என் கடவுளும் ஆண்டவருமாகிய உம்மை நோக்கி என்றென்றும் என் முகத்தைத் திருப்பி, உம்மை வருந்தச் செய்யும் எல்லா செயல்களைக் களையும்படிச் செய்து, விண்ணகத்தில் உம்முடைய தெய்வீக மகத்துவத்தின் தெளிவான கண்களுக்கு முன்பாக என்னைத் தகுதியுள்ளவராக்கியருளும். மூவொரு கடவுளின் ஒன்றிப்பில், உலகம் முடியும் வரை என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்


மூன்றாம் நாள்
உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தன்மையும் தருபவரே வந்தருள்வீர்.

வாசகம்: 1 கொரிந்தியர் 12 : 12 – 14, 27

இறை பக்தி என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் இறை பக்தி என்னும் கொடை, நம் இருதயங்களில் நம் அன்பான தந்தையாம் கடவுளிடம் ஒரு அன்பான பாசத்தை உண்டாக்குகிறது. அது கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மக்களையும் பொருட்களையும், அவரது அதிகாரம் பெற்றவர்களையும், இறைவனின் தாயாகிய அன்னை மரியாவையும், புனிதர்களையும், திரு அவையையும், அதன் தலைவர்களையும், நம் பெற்றோரையும், மூத்தோரையும், நம் நாட்டையும், அதன் ஆட்சியாளர்களையும், அன்பு செய்யவும், மதிக்கவும் நம்மை ஊக்குவிக்கிறது. இறை பக்தி என்னும் கொடையால் நிரப்பப்பட்டவர் தனது மதத்தை ஒரு பாரமான கடமையாகப் பார்க்காமல் மகிழ்ச்சியான பணியாக அதை நடைமுறைப்படுத்துகிறார். ‘எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே செயல்கள் உழைப்பாகக் கருதப்படுவதில்லை”.

செபம்:
ஓ தெய்வீக இறை பக்தியின் ஆவியாரே வாரும். வந்து என் இதயத்தைக் பற்றிக் கொள்ளும். நான் கடவுளது பணியில் மட்டுமே திருப்தி அடையவும், அவருக்காக அன்புடன் எல்லா நியாயமான திரு அவையின் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படியவும், எனக்குக் கடவுள் மீதுள்ள அன்பின் ஆவலைத் தூண்டிவிடும். ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்


நான்காம் நாள்
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே வந்தருள்வீர்.

வாசகம் 1: 1 கொரிந்தியர் 3 : 16 – 17
வாசகம் 2: உரோமையர் 8 : 14 – 17

மனவலிமை என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் மனவலிமை என்னும் கொடை, நம்மை எல்லா விதமான இயற்கையின் பயத்திற்கு எதிராக பலப்படுத்தப்பட்டு, நமது கடமைகளைத் திரம்பட நிறைவேற்ற ஆதரவளிக்கிறது. இக்கொடை நாம் மேற்கொள்ளும் மிகக் கடினமான ஆபத்துக்கள் நிறைந்த பணிகளை எதிர்கொள்ள உந்துதலையும் சக்தியையும் தந்து, சிலவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும், மனித அவமரியாதைகளைக் காலால் மிதித்துத் தள்ளி வாழ்நாளில் வரும் துன்பங்களை மெதுவாகத் தியாகம் செய்து சகித்துக் கொள்ளவும் திடம் அளிக்கிறது. ‘இறுதி வரை நிலைத்து நிற்பவன் மீட்படைவான்”.

செபம்:
ஓ தெய்வீக மனவலிமையின் ஆவியாரே வாரும். வந்து என் துன்ப நேரத்திலும் ஆபத்துக் காலத்திலும் என் ஆன்மாவைத் தூக்கி நிறுத்தி, என் பலவீனத்தை பலப்படுத்தி, என் எதிரிகளின் எல்லா தாக்குதல்களையும் எதிர்கொள்ளத் துணிவை அளித்து, நல்லவராகிய என் கடவுளைக்கு எதிராகப் பாவம் செய்து அவரிடமிருந்து என்றும் பிரியாதிருக்க உமது வல்லமை அளித்தருளும். ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்


ஐந்தாம் நாள்
உன்னத பேரின்ப ஒளியே வந்தருள்வீர்.
உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

வாசகம்: 1 கொரிந்தியர் 12 : 4 – 11, 31, 13 : 13

அறிவு என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் அறிவு என்னும் கொடை, நம் ஆன்மாவைக் கடவுளுடைய தொடர்பில், உண்மையான மதிப்பில் படைக்கப்பட்டவற்றை மதிப்பீடு செய்ய உதவுகிறது. இந்த அறிவு, படைப்புக்களின் பாசாங்குத்தனத்தை மறைத்து, அதன் வெறுமைத்தனத்தை வெளிப்படுத்தி, இறைபணியில் உள்ள கருவிகளின் ஒரே உண்மையான நோக்கத்தைச் சுட்டிக்காட்ட உதவுகிறது. இது கடவுளின் அன்பான கவலையைத் துல்லியமாகக் காட்டி, எல்லா சூழ்நிலையிலும் அவரை மாட்சிப்படுத்த நம்மை வழிநடத்துகிறது. அதன் ஒளியால் வழிநடத்தப்படும் நாம், முதலானவற்றை முதலில் வைத்து, கடவுளின் கொடையான நட்பை எல்லாவற்றிற்கும் மேலாக வைக்கத் தூண்டுகிறது. ‘அறிவைக் கொண்டோருக்கு அது வாழ்வின் நீரூற்று”.

செபம்:
ஓ தெய்வீக அறிவின் ஆவியாரே வாரும். வந்து என் தந்தையின் திருவுளத்தை நான் அறிந்து கொள்ளும்படி எனக்கு அருள் தாரும். இவ்வுலகப் பொருட்களின் வெறுமையை எனக்குக் காட்டி, அவற்றின் மாயையை உணர்த்தி, அவற்றை உமது மாட்சிக்காகவும், எனது மீட்புக்காகவும் பயன்படுத்தி, உம்மையும் நீர் அருளும் நிலையான கொடைகளையும் அவற்றுக்கு மேலாகக் காண வரமருளும். ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்


ஆறாம் நாள்
உமது அருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை.
நல்லது அவனில் ஏதுமில்லை.

வாசகம்: உரோமையர் 7 : 15 – 20, 8 : 26 – 27

புரிந்துணர்வு என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் புரிந்துணர்வு என்னும் கொடை, நம் புனித மதத்தின் உண்மைகளின் பொருளை அறியவும், நம்பிக்கையினால் தெரியவும், தெரிதலால் கற்கவும், கற்றலால் அதைப் பாராட்டி அதில் மகிழ்ந்திருக்கவும் உதவுகிறது. வெளிப்படுத்திய உண்மைகளின் உட்பொருளை ஊடுருவி, அவற்றின் வழியாக வாழ்க்கையின் புதுமைக்குள் விரைந்து செல்ல நம்மைத் தூண்டுகிறது. மலடாகவும் செயலற்றதாகவும் இருக்கும் நமது நம்பிக்கையை நலமான சாட்சியமிக்க வாழ்க்கை முறைக்குக் கொண்டு செல்ல ஊக்கமளிக்கிறது. ஆதனால் நாம் ‘கடவுளுக்குப் பிரியமான செயல்களினால் மனமகிழ்ச்சி அடையவும், கடவுளை நாடும் அறிவை மிகுதியாகப் பெறவும்” தொடங்குகிறோம்.

செபம்:
ஓ தெய்வீகப் புரிந்துணர்வின் ஆவியாரே வாரும். வந்து உமது மீட்பின் மறை உண்மைகளை நாங்கள் நன்கு அறிந்து நம்பிக்கை கொள்ளவும், இறுதியில் உமது ஒளியின் உதவியால் அந்த நித்திய ஒளியைக் காணத் தகுதி பெறவும், அந்த மாட்சியின் பிரகாசத்தில் தெளிவான பார்வை பெறவும் எங்கள் உள்ளத்திற்கு விழிப்பூட்டியருளும். ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்


ஏழாம் நாள்
மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர்.
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வாசகம்: கலாத்தியர் 5 : 1, 13 – 26

ஆலோசனை என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் ஆலோசனை என்னும் கொடை, நம் ஆன்மாவை இயற்கைக்கு முரணானவற்றைக் கடந்து, குறிப்பாகக் கடினமான சூழ்நிலைகளில், செய்ய வேண்டியவற்றை விரைவாகத் தீர்மானித்துச் சரியாகச் செயல்பட வைக்கிறது. பெற்றோர், ஆசிரியர், அரசு அலுவலர், கிறிஸ்தவ குடிமக்கள் என நம் அன்றாடக் கடமையில் எதிர்கொள்ளும் எண்ணற்ற திடமான நிகழ்வுகளுக்குப் பதிலளிக்க ஏற்ற அறிவையும் புரிந்துணர்வையும் வழங்குகிறது. இது இயற்கைக்கு அப்பாற்பட்ட பொது அறிவு, மீட்புக்கான தேடலின் விலைமதிப்பற்ற புதையல். ‘இவை எல்லாவற்றிற்கும் மேலாக, உன்னதமானவரை நோக்கிச் செபியுங்கள், அவர் உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.”

செபம்:
ஓ தெய்வீக ஆலோசனையின் ஆவியாரே வாரும். வந்து என் வழிகளிலெல்லாம் உதவி செய்து வழிகாட்டி, நான் என்றும் உமது திருவுளத்தை நிறைவேற்ற உதவியருளும். என் இதயம் என்றும் நன்மையை நாடவும், தீமையை விட்டு விலகவும், உமது கட்டளைகளின் நேரான வழிகளில் என்னை நடத்தி, எனது குறிக்கோளான நிலைவாழ்வைப் பெற என்னை வழிநடத்தியருளும். ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்


எட்டாம் நாள்
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்.
தவறிப் போனதை ஆண்டருள்வீர்.

வாசகம்: 1 கொரிந்தியர் 2 : 9 – 16

ஞானம் என்னும் கொடை:
எப்படி தானம் மற்ற எல்லா நல்லொழுக்கங்களையும் உள்ளடக்கியுள்ளதோ அதைப் போலவே தூய ஆவியார் அருளும் ஞானம் என்னும் கொடையே மற்ற எல்லாக் கொடைகளையும் நற்பண்புகளையும் உள்ளடக்கிய மிகச் சிறந்த கொடை. ‘அவள் வழியாகவே எல்லா நற்செயல்களும், எண்ணிலடங்காத செல்வங்களும் என்னை வந்தடைந்தது” என சாலமோனின் ஞான நூலில் எழுதப்பட்டுள்ளது. இந்த ஞானம் என்னும் கொடையே நம் நம்பிக்கையை உறுதிப்படுத்தி, எதிர்நோக்கைத் திடப்படுத்தி, தானத்தை முழுமைப்படுத்தி, உயர்ந்த அளவில் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிக்க நம்மை ஊக்குவிக்கிறது. இந்த ஞானம் இவ்வுலகைச் சார்ந்த மகிழ்வின் பால் ஈர்ப்பை இழக்கும் தெய்வீக விஷயங்களைப் புரிந்து மகிழ நம் உள்ளத்திற்கு ஒளியூட்டுகிறது. மேலும், ‘உங்களுடைய சிலுவையைச் சுமந்துகொண்டு என் பின்னே வாருங்கள். என் நுகம் இனிது. என் சுமை எளிது” என்னும் நம் மீட்பரின் வார்த்தை வழியாக கிறிஸ்து இயேசுவின் சிலுவை நமக்கு ஒரு தெய்வீக இனிமையை அளிக்கிறது.

செபம்:
ஓ தெய்வீக ஞானத்தின் ஆவியாரே வாரும். வந்து விண்ணகச் செயல்களின் மறை உண்மைகளையும், அவற்றின் மேலான பெருமைகளையும், வல்லமையையும், அழகையும் என் ஆன்மாவுக்கு வெளிப்படுத்தியருளும். எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றை அன்பு செய்து, உலகெல்லாம் கடந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அடையக் கற்றுத்தாரும். அவற்றைப் பெற்று என்றும் பற்றிக் கொள்ள உதவியருளும். ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்


ஒன்பதாம் நாள்
இறைவா, உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர். புண்ணிய பலன்கள் வழங்கிடுவீர். இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்.
அழிவிலா இன்பமும் அருள்வீரே. ஆமென்.

வாசகம் 1: யோவான் 20 : 19 – 23
வாசகம் 2: 2 கொரிந்தியர் 5 : 20 – 21, 6 : 4 – 6

தூய ஆவியாரின் கனிகள்:
தூய ஆவியாரின் கொடைகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட நல்லொழுக்கங்களை முழுமைப்படுத்தி, தெய்வீகத்தை அதிகக் கருத்தோடு ஊக்குவிக்க நம்மைப் பழக்கப் படுத்துகிறது. தூய ஆவியாரின் வழிநடத்துதலில் கடவுளின் அறிவிலும் அன்பிலும் நாம் வளரும்போது, நம்முடைய இறைப்பணி மிகவும் நேர்மையானதாகவும், தாராளமானதாகவும், நல்லொழுக்க முறையில் முழுமையடையும். நமது இதயத்தை மகிழ்ச்சியாலும் ஆறுதலாலும் நிறைவிக்கும் இப்படிப்பட்ட நல்லொழுக்கச் செயல்களே தூய ஆவியாரின் கனிகள். இக்கனிகள் நமது நல்லொழுக்கச் செயல்களை மேலும் கவர்ச்சிகரமானதாக்கி நம்மை ஆண்டு நடத்தும் இறைவனுக்கு அதிகமாகச் சேவை செய்ய வலுவான ஊக்கத்தை அளிக்கின்றன.

செபம்:
ஓ தெய்வீகத் தூய ஆவியாரே வாரும். வந்து உமது விண்ணகக் கனிகளாகிய அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகியவற்றால் என் இதயத்தை நிரப்பி, நான் இறைப்பணியில் என்றும் சோர்ந்து போகாமல், உமது தொடர்ச்சியான வழிநடத்தலுக்கு நம்பிக்கையுடன் கீழ்ப்படிவதன்மூலம், தந்தையிடமும் மகனிடமும் உள்ள அன்பில் என்றென்றும் ஒன்றித்து வாழ அருள்புரியும் ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
திருத்துவப் புகழ் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்


தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்

(ஒன்பது நாள்களும் சொல்ல வேண்டும்)

விண்ணகத் தந்தையோடும் அவரது திரு மகனாம் இயேசு கிறிஸ்துவோடும் உறவாடும் தூய ஆவியாரே! விண்ணகச் சாட்சிகளின் பெருங்கூட்டத்திற்கு முன் முழந்தாள்படியிட்டு, என்னையும், என் ஆன்மாவையும், என் உடலையும் அர்ப்பணிக்கிறேன். உமது தூய்மையின் பிரகாசத்தையும், உமது தவறாத நீதியின் திறமையையும், உமது அன்பின் வலிமையையும் நான் போற்றிப் புகழ்கிறேன். என் ஆன்மாவின் வல்லமையும் ஒளியும் நீரே. நான் இருப்பதும் இயங்குவதும் வாழ்வதும் உம்மாலே தான். என் அவநம்பிக்கையினாலும் என் அற்பப் பாவங்களினாலும் உம்மை நான் ஒருபோதும் துயரத்துக்குள்ளாக்காமலிருக்க என் முழு உள்ளத்தோடு உம்மை நோக்கி மன்றாடுகிறேன். என் ஒவ்வொரு சிந்தனைகளையும் இரக்கத்துடன் காத்து, உமது ஒளியைக் காணவும், உமது குரலைக் கேட்கவும், உமது இரக்கமுள்ள ஊக்கங்களைப் பின்பற்ற தயை புரியும். நான் உம்மை என்றும் பற்றிக் கொண்டு, என் பலவீனத்திலே என்னைக் காக்கும்படி என்னை உமக்களிக்கிறேன். இயேசுவின் துளையுண்ட கால்களைப் பிடித்து, அவருடைய ஐந்து திருக் காயங்களையும் பார்த்து, அவருடைய திரு இரத்தத்தில் நம்பிக்கை கொண்டு, குத்தித் திறக்கப்பட்ட விலாவையும் இதயத்தையும் வணங்கி, ஆராதனைக்குரிய ஆவியாரே, என் பலவீனத்தின் உதவியாளரே, நான் என்றும் உமக்கு எதிராகப் பாவம் செய்யாதவாறு, உம் அருளினால் என்னைக் காத்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் தூய ஆவியாரே, ‘ஆண்டவரே பேசும். உம் அடியான் கேட்கிறேன்” என்று நான் எங்கும் எப்பொழுதும் சொல்ல உமதருளைப் பொழிந்தருளும். ஆமென்.


GOTS - 7 Gifts of the Holy Spirit - St. Basil the Great Catholic ...தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்

(ஒன்பது நாள்களும் சொல்ல வேண்டும்)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, விண்ணகத்திற்குச் செல்லும் முன் உமது திருத்தூதர்கள் மற்றும் சீடர்களின் ஆன்மாக்களின் வேலைகளை நிறைவேற்ற தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித்தீரே. உமது இரக்கத்தின் அன்பின் வேலைகளை எங்கள் ஆன்மாக்களில் முழுமையாக்க, அதே தூய ஆவியாரை எங்களுக்கும் தந்தருளும். அழிந்து போகும் இவ்வுலகச் செல்வங்கள் மீது பற்று கொள்ளமல், நிலைவாழ்வை அளிக்கும் உன்னதச் செல்வத்தின் மீது ஆசை கொள்ள உமது ஞானத்தின் ஆவியைப் பொழிந்தருளும். உமது தெய்வீக உண்மையின் ஒளியால் எங்களது மனதை விழிப்பூட்ட உமது புரிந்துணர்வின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளை மட்டும் மகிழ்வித்து விண்ணகத்தை அடையும் வழியைத் தேர்ந்தெடுக்க உமது ஆலோசனையின் ஆவியைப் பொழிந்தருளும். எங்கள் மீட்புக்கு எதிரானத் தடைகளைச் சகித்து, எங்களது சிலுவையை சுமந்து உம்மைப் பின்செல்ல உமது வலிமையின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளை அறிய, எங்களை அறிய, புனிதர்களின் வழியைப் பின்பற்றி முழுமை அடைய உமது அறிவின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளுக்கு செய்யும் சேவையில் இனிமையும் மகிழ்ச்சியும் அடைய உமது பக்தியின் ஆவியைப் பொழிந்தருளும். நாங்கள் கடவுளிடம் அன்பான பயபக்தி கொண்டு, கடவுளை வருத்தப்படுத்தும் எந்தச் செயலையும் செய்யமலிருக்க உமது தேவபயத்தின் ஆவியைப் பொழிந்தருளும். ஆண்டவரே உமது உண்மைச் சீடர்களின் அடையாளத்தால் எங்களை முத்திரையிட்டு, உமது ஆவியால் எங்களை வழிநடத்தியருளும். ஆமென்.


இறுதி செபம்

முத: என்றென்றும் வாழும் இறைத் தந்தையே!
எல்: உம்மை ஆராதிக்கிறோம், எங்களை ஆசீர்வதியும்.
முத: என்றென்றும் வாழும் இறை மகனே!
எல்: உம்மை ஆராதிக்கிறோம், எங்களை ஆசீர்வதியும்.
முத: என்றென்றும் வாழும் இறை ஆவியே!
எல்: உம்மை ஆராதிக்கிறோம், எங்களை ஆசீர்வதியும்.
முத: மூவொரு கடவுளாகிய எங்கள் இறைவா!
எல்: உம்மை ஆராதிக்கிறோம், எங்களை ஆசீர்வதியும்.

முத: எம்மைப் படைத்தத் தூய தந்தையே!
எல்: உமக்கு நன்றி கூறுகின்றோம்.
முத: எம்மைப் மீட்டத் திரு மகனே!
எல்: உமக்கு நன்றி கூறுகின்றோம்.
முத: எம்மைத் தூய்மைப்படுத்தும் தூய ஆவியே!
எல்: உமக்கு நன்றி கூறுகின்றோம்.
முத: தூய ஆவியே என்றும், வற்றாத இறை அன்பே!
எல்: உம்மை வணங்கி ஆராதிக்கிறோம்.
முத: தூய ஆவியாரின் பத்தினியாகிய தூய கன்னி மரியாவே!
எல்: எங்கள் ஆன்மாவைத் தூய ஆவியாரின் இல்லமாக்க பரிந்துரை செய்தருளும்.

முத: செபிப்போமாக, நிறையுள்ளவராகிய எங்கள் வானகத் தந்தையே! பனி போலத் தூய ஆவியாரை எங்கள் இதயத்தின் ஆழத்தில் இறங்கி வரச் செய்து எங்களைத் தூயவராக்கி, எங்கள் ஆன்மா வளம் பெறச் செய்தருள்வீராக.
எல்: ஆமென்.