குடும்பங்களை ஒப்புக்கொடுக்கின்ற செபம்

0
6831

இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்துவரும் சகல உபகாரங்களையும், சொல்லமுடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம்.

நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உம்முடைய திருஇருதய நிழலில் இளைப்பாறச் செய்தருளும்.

தவறி எங்களில் எவரேனும் உமது இருதயத்தை நோகச்செய்திருந்தால் அவர் குற்றத்திற்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தை பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.

இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருந்தாப்பியர்களுக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு, தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டிலும் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக.

இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே! சிறுபிள்ளைகளை எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே. இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும் வளரச்செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்க மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே! முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து, மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாறக் கிருபை புரிந்தருளும். – ஆமென்

இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.