சிலுவைப்பாதை -14 நிலைகள் | Way of the Cross – 14 Stations

முன்னுரை

“சுற்றும் வரை பூமி, சுடும் வரை நெருப்பு, போராடும் வரைதான் மனிதன்” என்பார்கள். ஆம் போராட்டாமில்லா வாழ்வு செத்தவாழ்வு. ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பல சவால்கள் உண்டு. இறை விருப்பம் நம்மில் நிறைவேற, இயேசு கிறிஸ்துவைப் போல, சுயநலமில்லாது, பாவத்திற்கு சிறிதேனும் இடம் தராது, புண்ணிய வாழ்வுக்கு நம்மையே நாம் அர்ப்பணிக்க வேண்டும். இது தான் கிறிஸ்தவனாக வாழ்வதற்கான பெரிய சவால். இதில் வெற்றி பெற நாமும் ஓர் போராளியாகதான் மாற வேண்டும்.
பல வருடங்களாக சிலுவை பாதையில் பங்கெடுக்கிறோம். மனதுருக மன்றாடி, மீண்டும் சிறு சிறு தவறுகளுக்கு இடம் கொடுத்து கொண்டு தானே இருக்கிறோமென்று புனிதத்திற்கான போராட்டத்தை கைவிடாமலிருக்க, வீழ்ந்துகிடக்கும் நம் உணர்வுகளை தட்டிகொடுத்து, மீண்டும் போராட அழைக்கிறது திருச்சபை. பாவத்ததால் வீழந்துகிடக்கும் நாம், எப்பொழுதெல்லாம் எழுந்து நடக்கிறோமோ, போராட ஆரம்பிக்கிறோமோ, அப்பொழுதே நாம் உண்மையான கிறஸ்தவனாக மாறுகிறோம். ஏனெனில் இயேசு ஒரு போராளியாக இருந்துதான் நம்மை மீட்டார். இறைவிருப்பம் நம்மிலே நிறைவேற, மன உறுதியுடன் புனித பயணத்திற்கு தயாராவோம், ஏனெனில், நமக்காக போராடுபவர் நம்மோடு இருக்கிறார்.
பாவத்திற்கு எதிரான தொடர்ச்சியான நல்ல முயற்சிகளே புனிதத்தின் ஆரம்பம் என்றுனர்ந்தவர்களாக இந்த புனித பயணத்தில் பங்கெடுப்போம்.

முதல் ஸ்தலம் – இயேசு தீர்ப்பிடப்படுகிறார்
Station1ஒருவர்: திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்
மக்கள்: அது ஏனென்றால் உமது பாராமான திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்: மன்னிப்புப் பெறுவீர்கள்.” – லூக்கா 6:37

தோல்வி இல்லாத மனிதன் ஒருவன் இருக்கின்றான் என்றால், அவன் நிச்சயமாக ஒரு போராளியாகத்தான் இருப்பான். ஏனென்றால் ஒரு போராளியின் வெற்றியானது அவன் தோல்வியிலிருந்து தான் பரிணமிக்கிறது. எனவேதான் தோல்விகளை வெற்றியின் முதல்படி என்பார்கள். இயேசுவுக்கும் அப்படிதான். இதோ மீட்பு என்னும் மாபெரும் வெற்றி, தீர்ப்பு என்னும் சறுக்களில் ஆரம்பிக்கின்றது…….. இயேசு தீர்ப்பிடப்படுகிறார்…….

அன்பு மகனே ! மகளே !                                                                                      இதோ என்னை சிலுவையில் அறையப்பட தீர்ப்பளிக்கிறார்கள். நன்மைக்கும், தீமைக்கும் நடக்கும் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நினைத்து என்னை தீர்ப்பிடுகிறார்கள். இவன் தச்சன் மகனல்லவோ? இவன் அன்னையையும், சதோதரர்களையும் நாம் அறிந்திருக்கிறோமே? நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரகூடுமோ? இப்படிப்பட்ட விமர்சனங்களின் உச்சக்கட்டம் தான் சிலுவையில் அறையப்பட தீர்ப்பு. தெரிந்தோ தெரியாமலோ இந்த சமூகம் ஒவ்வொருவருக்கும் ஒரு தீர்ப்பை எழுதுகின்றது. இவன் படிப்பறிவில்லாதவன், இவனுக்கு பேசதெரியாது, கோபகாரன் என்பன போன்ற பல முத்திரைகளை பதித்து வைக்கின்றது. இந்த முத்திரைக்குள் நீ அகப்பட்டோ, அல்லது மற்றவர்களையோ, உன்னையோ அகப்படுத்தியோ இருக்கிறாய் என்றால், மாற்றத்திற்கான மனநிலையோடு, புனிதவாழ்விற்காக புறப்படு….. இதோ என் கரங்கள்.

செபம்: அன்பு இயேசுவே எனக்கு நான் கொடுக்கும் தீர்ப்புகளையும் சமூகம் எனக்கு கொடுக்கும் தீர்ப்புகளையும் தாண்டி புனித வாழ்விற்கு கடந்து வர அருள்தாரும். ஆமென்.

விண்ணுலகில்; இருக்கின்ற…….. 1 முறை
அருள் நிறைந்த மரியே…….. 1 முறை
தந்தைக்கும் மகனுக்கும் தூய………. ஆமென்.

ஒருவர்: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்
ஒருவர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவன
மக்கள்: ஆமென்.

இரண்டாம் ஸ்தலம் – இயேசுவின் மேல் சிலுவை சுமத்தப்படுகிறது
ஒருவர்: திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்
மக்கள்: அது ஏனென்றால் உமது பாராமான திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னை பின்பற்றட்டும்” – மத்தேயு 16:24

என் வாழ்வின் சுமைகளெல்லாம் எப்போது தீரும்? என்று ஏங்காதவர்கள் யாருமில்லை. குடும்பம், பிள்ளைகள், படிப்பு, தொழில், எதிர்காலம் இதுபோன்ற எத்தனையோ சுமைகளோடு தினம் தினம் போராடுகிறோம், என்று தீரும் இந்த சுமை? எப்போது சுமைகள் சுகமாய் மாறும் என்ற நம் தவிப்புகளுக்கு மத்தியில் இதோ இயேசுவின் மேல் ஒரு சுமை

அன்பு மகனே ! மகளே !
வாழ்க்கையில் ஒரு சில சுமைகளை நீங்கள் கட்டாயம் சுமந்தே ஆக வேண்டும். குடும்பம் ஒருசில நேரங்களில் சுமையாக இருக்கும். உறவுகள் ஒருசில நேரங்களில் சுமையாக இருக்கும். இவைகள் போல் இன்னும் பல. இவைகள், வாழ்க்கையில் எதார்த்த சிலுவைகள். புனிதத்திற்கு புறப்பட தயாரான நீ சுமைகளை சுமக்க தயாரா? சிலுவையில்லாத கொல்கத்தாவும், சுமைகளில்லாத போராட்ட வாழ்வும் வீண். மகிழ்ச்சியோடு சுமைகளை சுமக்க கற்றுக்கொள். அப்போது சுமைகள் தானாக சுகமாக மாறும். வா என் மகனே! தொடர்ந்து நடப்போம்.

செபம்: அன்பு இயேசுவே என் சுமைகளை தாங்கிய வண்ணமாக புனித வாழ்வுக்கு கடந்துவர அருள்தாரும் ஆமென்.

விண்ணுலகில்; இருக்கின்ற…….. 1 முறை
அருள் நிறைந்த மரியே…….. 1 முறை
தந்தைக்கும் மகனுக்கும் தூய………. ஆமென்.

ஒருவர்: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்
ஒருவர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவன
மக்கள்: ஆமென்.

மூன்றாம் ஸ்தலம்
இயேசு முதல்முறையாக கீழே விழுகிறார்

ஒருவர்: திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அது ஏனென்றால் உமது பாராமான திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள்” – எபிரேயர் 12:3

இலக்கு சரியாக இருந்தபோதும் இயேசுவுக்கு ஏன் இந்த தடுமாற்றம்? உடல் பலமிழந்துவிட்டதா? இல்லை உள்ளம் பலமிழந்துவிட்டதா? இல்லை இரண்டுமே ஒத்துழைக்க மறுத்துவிட்டதா இயேசுவின் பயணத்தல் கூட வீழ்ச்சிகளென்றால் நாம் எம்மாத்திரம். உடல் பலமிழக்கலாம் ஆனால் உள்ளம் பலமிழக்கலாமா?
அன்பு மகனே ! மகளே !
உன் வாழ்வில் தடுமாற்றமா? தோல்வியா? உன்னை வீழ்த்திவிட்டார்கள் என்று நினைக்கிறாயா? வாழ்ந்து என்ன புண்ணியமென்று நினைக்கிறாயா? உன் கண்ணீரை துடைத்துக்கொள். என் உடல் பலமிழந்தது, ஆனால்; என் உள்ளம் பலமிழக்கவில்லை. என்னைப் போல் உள்ளத்தில் உறுதிகொள். உடலுக்கு பலம் தானாக வந்துசேரும். உன் வீழச்சி மற்றவர்களுக்கு ஒருவேளை மகிழ்ச்சியாக கூட இருக்கும். தூசியை தட்டிவிட்டு இலக்கை நோக்கி செல். ஏனெனில் உனக்காக போராடுவது நானல்லவா. உன் தோல்வியும், வீழ்ச்சியும் உன் நம்பிக்கையை குறைத்து, புண்ணிய வாழ்வினை தடைசெய்யாது என்ற மனஉறுதியுடன் என்னுடன் வா…..

செபம்: அன்பு இயேசுவே வாழ்வின் தடுமாற்றத்தை புரிந்து கொண்டு உம்மை போல் திடம் கொண்டு உம் விருப்பபடியே எழுந்து நடக்க அருள்தாரும் ஆமென்.

விண்ணுலகில்; இருக்கின்ற…….. 1 முறை
அருள் நிறைந்த மரியே…….. 1 முறை
தந்தைக்கும் மகனுக்கும் தூய………. ஆமென்.

ஒருவர்: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்
ஒருவர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவன
மக்கள்: ஆமென்.

நான்காம் ஸ்தலம்
இயேசு தன் தாய் மரியாளை சந்திக்கிறார்

ஒருவர்: திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம்
செலுத்துகின்றோம்
மக்கள்: அது ஏனென்றால் உமது பாராமான திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு
இரட்சித்தீர்

விண்ணுலகில் உம்மையன்றி எனக்கிருப்பவர் யார்? மண்ணுலகில் வேறுவிருப்பம் உம்மையன்றி எனக்கேதுமில்லை” – திருப்பாடல்கள் 73:25

ஒருசில நேரங்களில், ஒரு சிலரிடம் சற்று பேசினாலே, மனது சற்று இலகிப் போகின்றது. மனதில் பாரம் குறைந்து போகின்றது. இதை போன்றுதான் இயேசு தம் தாயை சந்திக்கிறார். அன்னை மரியின் சந்திப்பு, இயேசுவை கல்வாரியிலிருந்து பிரிக்கும் சந்திப்பு அல்ல. மாறாக கல்வாரிக்கு உரம் சேர்க்கும்.
அன்பு மகனே ! மகளே !
என் தாயின் சந்திப்பு அன்பு சந்திப்பு. ஆனால் அந்த அன்பு என்னை போராட்ட வாழ்விலிருந்து பிரித்துவிடவில்லை. மாறாக போராட கரம் கொடுக்கும் சந்திப்பாக அமைகிறது. பிரச்சனைகளில்லாத, க~;டமில்லாத வாழ்வை இறைவன் கொடுக்க வேண்டும் என்பதை விட, என் பிரச்சனைகளில், க~;டத்தில் இறைவன் உடனிருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, வாழ பழகிக்கொள். ஏனெனில் கிறிஸ்துவ வாழ்வு போராட்ட வாழ்வு, கிறிஸ்துவ மீட்பென்பது சிலுவை வழி மீட்பு, இந்த மீட்புதான் என் தந்தையின் விருப்பம். வா……அன்பு மகனே, மகளே…. தொடர்ந்து பயணிப்போம்.

செபம்: அன்பு இயேசுவே என் பிரச்சனைகளில் உன் உடனிருப்புதான் என் பலம் என்பதை உணர்ந்து கொள்ள கற்றுதாரும் ஆமென்.

விண்ணுலகில்; இருக்கின்ற…….. 1 முறை
அருள் நிறைந்த மரியே…….. 1 முறை
தந்தைக்கும் மகனுக்கும் தூய………. ஆமென்.

ஒருவர்: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்
ஒருவர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவன
மக்கள்: ஆமென்.

ஐந்தாம் ஸ்தலம்
இயேசுவின் சிலுவையை சீமோன் சுமக்கிறார்

ஒருவர்: திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்
மக்கள்: அது ஏனென்றால் உமது பாராமான திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

நன்மை செய்யக்கற்றுக்கொள்ளுங்கள்: நீதியை நாடித் தேடுங்கள்: ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்” – எசாயா 1:17

சுமைகள் ஏன் நமக்கு பாரமாக இருக்கிறது தெரியுமா? உண்மையில் நாம் அதை கட்டாயத்தின் பேரில் சுமப்பதால் தான். கருவைத் தாங்கும் தாய்க்கு குழந்தை ஏன் சுமையாக இல்லை? ஏனென்றால் அவள் சுமை கட்டாயத்தின் பேரில் வந்தது அல்ல. எனவே தான் சுமையை சுகமாக சுமக்கிறார்.
அன்பு மகனே! மகளே!
இதுவரை சுகமாய் தூக்கி வந்த என் சிலுவையை சீரேனே ஊரை சேர்ந்த சீமோன் கட்டாயத்தின் பேரில் சுமக்கிறான். எனவே தான் அது சுமையாய் மாறுகிறது. அன்பாய் செய்யும்போது சுகமாகவும், கட்டாயத்தின் பேரில் செய்யும் போது சுமையாக மாறுவது எதார்த்தம். நல்லவனாகவும், பிறரன்பு உள்ளவனாகவும், புனித வாழ்வில் நிலைத்திருப்பவனாகவும் வாழ்வது, கட்டாயம் என்று நினைத்தால் அது சுமையாய் மாறிவிடும். நல்லவனாயும், மனிதநேயமுள்ளவனாக வாழ்வது என் சுதந்திரம், அதுவே என் தந்தையின் விருப்பம் என்று நினைத்தால் அது சுகமாய் மாறும்.

செபம்: அன்பு இயேசுவே என் சுமைகளை சுதந்திரமாய் சுமக்க எனக்கு அருள் தாரும் ஆமென்.

விண்ணுலகில்; இருக்கின்ற…….. 1 முறை
அருள் நிறைந்த மரியே…….. 1 முறை
தந்தைக்கும் மகனுக்கும் தூய………. ஆமென்.

ஒருவர்: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்
ஒருவர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவன
மக்கள்: ஆமென்.

ஆறாம் ஸ்தலம்
இயேசுவின் முகத்தை வெரோணிக்கா துடைக்கிறார்

ஒருவர்: திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்
மக்கள்: அது ஏனென்றால் உமது பாராமான திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

இவ்வாறு நீங்கள் நன்மையைச் செய்ய முன்வருவதன் மூலம், மதிகெட்ட அறிவிலிகளை வாயடைக்கச் செய்யவேண்டுமென்பதே கடவுளின் திருவுளம்” – 1 பேதுரு 2:15

இயேசுவின் கல்வாரி பாதையில் இதோ இயேசுவுக்கு இன்னுமொரு தாய். பத்து மாதம் தாங்கும் பாக்கியமில்லாத தாய்தான், ஆனால் இவளின் செயல்கள் தாயை பிரதிபலிக்கும் செயல்கள். வெறும் உணர்ச்சிகளை மையமாக கொண்ட அன்பு தடைகளை பார்த்து தளர்ந்துவிடும். ஆனால் உள்ளத்தை மையமாக கொண்ட அன்பு தடைகளை தாண்டி வளரும். இதோ வெரோணிக்காள் உண்மையான அன்பால் உந்தப்பட்டு இயேசுவின் முகத்தை துடைக்கிறார்.
அன்பு மகனே! மகளே!
உனது போரட்ட வாழ்வில் என்னை சந்திக்க வேண்டும்? அப்படி என்றால் இதோ இந்த வெரோணிக்காவைப் போல் பல தடைகளை தாண்ட வேண்டும். உன் சுயநலம், அந்தஸ்து, பதவி, உன் அடையாளம் இவைகளை தாண்டி வரவேண்டும். உன் சுய நல வேலிகளை தாண்டி, என்னிடம் வருவாயா? இதோ தாகமாய் இருக்கிறேன். என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற.. வா என் மகனே! மகளே!

செபம்: அன்பு இயேசுவே நல்ல கிறிஸ்தவ மக்களாக வாழ எதிர்வரும் தடைகளை தாண்டிவர உமது பலத்தை தாரும் ஆமென்.

விண்ணுலகில்; இருக்கின்ற…….. 1 முறை
அருள் நிறைந்த மரியே…….. 1 முறை
தந்தைக்கும் மகனுக்கும் தூய………. ஆமென்.

ஒருவர்: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்
ஒருவர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவன
மக்கள்: ஆமென்.

ஏழாம் ஸ்தலம்
இயேசு இராண்டாம் முறை கீழே விழுகிறார்

ஒருவர்: திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்
மக்கள்: அது ஏனென்றால் உமது பாராமான திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்;: ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” – மத்தேயு 26:41

துவக்கம் நன்றாக இருக்கும்போது, இந்த உலகம் கைத்தட்டி பார்க்கிறது பாராட்டுகிறது. ஆனால் இடையில் தடுமாறும் போது கரஒலிகள் அனைத்தையும் விமர்சன ஒலிகளாக மாற்றிவிடுகிறது. ஏனக்கு அப்பவே தெரியும், இவனால் முடியாது, இவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை இது போன்ற பல விமர்சனங்களை கேட்கலாம்.
இதோ உறுதியோடு ஆரம்பித்த இயேசுவின் புரட்சிப்பயணத்தில் இடைச் செறுக்காக வந்த இரண்டாம் வீழ்ச்சி. இயேசு இரண்டாம் முறை தரையில் வீழ்கிறார் விண்ணுக்கும், மண்ணுக்குமிடையே போராட்டத்தில், இதோ மண் இராண்டவது முறையாக மிரட்டிப் பார்க்கின்றது.
அன்பு மகனே! மகளே!
நான் மாற வேண்டும், என்சிந்தனை மாற வேண்டும், என் செயல்கள் மாற வேண்டும், என்ற உறுதியோடு ஆரம்பித்த உன் முயற்சியில் நிலைத்து நிற்க முடியாமல் வீழ்ந்து விட்டாயா? உடலுக்கும், ஆன்மாவிற்கும் நடக்கும் போராட்டத்தில் உடல் வென்று விட்டதென்று நினைக்கிறாயா? இல்லை இது உன் பயணத்தில் வந்த சறுக்கல்கள் அவ்வளவுதான். மீண்டும் எழுந்து நடக்க கற்றுக்கொள். ஏனெனில் கல்வாரி இன்னும் சற்று தொலைவில்தான் புனித வாழ்வென்பது நல்லவற்றிக்காக இன்னும் சற்று முயற்சிக்கும் போராட்டம்தான் துணிவுகொள், எழுந்து நட!

செபம்: அன்பு இயேசுவே என் வாழ்வில் வரும் சறுக்கல்களை என் வாழ்வின் செதுக்கல்கலாக மாற்றிக் கொள்ள அருள் தாரும் ஆமென்.

விண்ணுலகில்; இருக்கின்ற…….. 1 முறை
அருள் நிறைந்த மரியே…….. 1 முறை
தந்தைக்கும் மகனுக்கும் தூய………. ஆமென்.

ஒருவர்: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்
ஒருவர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவன
மக்கள்: ஆமென்.

எட்டாம் ஸ்தலம்
இயேசு எருசலேம் பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார்

ஒருவர்: திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்
மக்கள்: அது ஏனென்றால் உமது பாராமான திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது: மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” – மாற்கு 1:15

வார்த்தைகளாலும், செயல்களாலும் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை கண்ணீர் வெளிப்படுத்திவிடும். இதோ, இயேசுவின் மேல் உள்ள பரிதவிப்பை தங்கள் கண்ணீரால் வெளிப்படுத்துகிறார்கள் எருசலேம் பெண்கள். பாவத்தால் கரைப்பட்ட இம்மனிதத்தை உங்கள் கண்ணீரால் அல்ல, என் செந்நீரால் கழுவ இருக்கிறேன் என்று புரிய வைக்கிறார் இயேசு!
அன்பு மகனே! மகளே!
உன் வாழ்கையில் வரும் துயரங்களை எருசேலம் பெண்களைப் போன்று கண்ணீரோடு நிறுத்திவிடாதே. உன் துயரங்களையும் போராட்டங்களையும் என்னைப் போல வெற்றிக் கொண்டு நிறுத்த வேண்டும். உன் கண்ணீர் துளிகளை பன்னீர் துளிகளாக மாற்ற புனித வாழ்விற்கான போராட்டத்தை பலமாக்குவது உன் பொறுப்பு. என் அருள் உனக்கு போதும், உன் பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும் தொடர்ந்துவா..

செபம்: அன்பு இயேசுவே என் முயற்சிகளை கண்ணீரோடு நிறுத்திவிடாமல் இறுதிவரைக்கும் போராடும் மனப்பக்குவத்தை தந்தருளும் ஆமென்.

விண்ணுலகில்; இருக்கின்ற…….. 1 முறை
அருள் நிறைந்த மரியே…….. 1 முறை
தந்தைக்கும் மகனுக்கும் தூய………. ஆமென்.

ஒருவர்: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்
ஒருவர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவன
மக்கள்: ஆமென்.

ஒன்பாதாம் ஸ்தலம்
இயேசு மூன்றாம் முறைக் கீழே விழுகிறார்

ஒருவர்: திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்
மக்கள்: அது ஏனென்றால் உமது பாராமான திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார்” – திருப்பாடல்கள் 73:25

இயேசுவின் சிலுவை பயணத்தில் அவர் மூன்று முறை மட்டும் விழவில்லை, மாறாக வீழ்ச்சிகள், தடுமாற்றங்களுக்கு மத்தியில் தான் கல்வாரியை அடைகிறார். வேண்டிய மட்டும் அடித்து, கேவலப்படுத்திய வீரர்களே சோர்ந்திருக்கும் போது, மனித வலுவில் சிலுவை சுமக்கும் இயேசு, மீண்டும் சோர்ந்து போய் மண்ணில் சாய்வது எதார்தம்தானே? இதோ, இயேசு மீண்டும் மண்ணில் விழுகிறார்
அன்பு மகனே ! மகளே!
உன் மனமாற்றத்திற்காக நான் விழுகிறேன், மனம் மாற மறுக்கும் உன் உள்ளத்தை சற்று என் மீது செலுத்து, ஆனால் கட்டாயத்தின் பேரில் அல்ல. வீழ்ந்து கிடக்கும் உன்னைத் தொட நான் தயார். எனக்கு வேண்டியதெல்லாம் “ஆம்” என்னும் உன் சுதந்திர அனுமதி அவ்வளவுதான். என் தாயின் ஆம் என்ற சொல்தான், மனுக்குல மீட்பின் ஆரம்பம். இதே வார்த்தையைதான் உன்னில் எதிர்ப்பார்த்து இதோ எழுகிறேன்.

செபம்: அன்பு இயேசுவே என் மனமாற்றத்திற்கு தடையாக இருப்பதை விலக்கி வைக்க என் மனதிற்கு பலத்தை தாரும் ஆமென்.

விண்ணுலகில்; இருக்கின்ற…….. 1 முறை
அருள் நிறைந்த மரியே…….. 1 முறை
தந்தைக்கும் மகனுக்கும் தூய………. ஆமென்.

ஒருவர்: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்
ஒருவர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவன
மக்கள்: ஆமென்.

பத்தாம் ஸ்தலம்
இயேசுவின் ஆடைகளை களைகிறார்கள்

ஒருவர்: திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்
மக்கள்: அது ஏனென்றால் உமது பாராமான திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்: இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்” – 1 பேதுரு 2:21

வியர்வையாலும், இரத்தத்தாலும் நனைந்திருக்கும் இயேசுவின் உடைகளை களைகிறார்கள். அதில் அந்த ஆடை யாருக்கு என்பதற்காக சீட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், உண்மையில் விலைமதிப்பில்லாதது அந்த ஆடைக்குள் இருந்த இயேசுவின் உடல்தான். மூடர்கள் முத்தை விட்டு விட்டு சிப்பியை எடுத்துக் கொள்கிறார்கள்.
அன்பு மகனே ! மகளே!
சுதந்திரம் என்பதை, இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், அதை தேர்ந்தெடுத்தல் எனலாம். நன்மை – தீமை, பாவம் – புண்ணியம், உண்மை – பொய், இவைகளுக்கு மத்தியில் எதை நீ தேர்ந்தெடுக்க விரும்புகிறாய்? என் அன்பு பிள்ளாய், சுதந்திரத்தின் உண்மை பொருளை உணர்ந்து, நன்மையை தேர்வு செய்து, புண்ணிய வாழ்வில் உன்னை ஒன்றிணைக்க தயாராகு.

செபம்: அன்பு இயேசுவே என் புனித வாழ்விற்கு நன்மைகளை விருப்பத்தோடு தேர்ந்துக்கொள்ள அருள்தாரும் ஆமென்.

விண்ணுலகில்; இருக்கின்ற…….. 1 முறை
அருள் நிறைந்த மரியே…….. 1 முறை
தந்தைக்கும் மகனுக்கும் தூய………. ஆமென்.

ஒருவர்: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்
ஒருவர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவன
மக்கள்: ஆமென்.

பதினோராம் ஸ்தலம்
இயேசு சிலுவையில் அறையப்படுகிறார்

ஒருவர்: திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்
மக்கள்: அது ஏனென்றால் உமது பாராமான திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார்” – கொலோசையர் 2:14

முன்பு ஆடைகளை களைந்தார்கள், இப்போது உயிரைக் களைகிறார்கள். முன்பு இயேசுவின் மேல் சிலுவை, இப்போது சிலுவையின் மேல் இயேசு. அவமானத்தின் உச்சக்கட்டமாக இயேசுவை சிலுவையில் தொங்க விடுகிறார்கள். இனி சிலுவை வேறு, இயேசு வேறல்ல.
அன்பு மகனே ! மகளே !
சிலுவையை என்னிடமிருந்து பிரித்தால், நான் வந்த நோக்கமே பெய்யாய் போகும். சிலுவை என் இலக்கு. அதில் ஆணிகள் என் பரிசு. இதோ என் இலக்கில் நான் ஒன்றித்துவிட்டேன். புனித வாழ்வென்னும் உன் இலக்கில், நீ ஒன்றிப்பதெப்போது?

செபம்: அன்பு இயேசுவே மாறவேண்டும் என்றும் என் இலக்கில் எப்போதும் என் மனம் ஒன்றித்திருக்க அருள்தாரும் ஆமென்.

விண்ணுலகில்; இருக்கின்ற…….. 1 முறை
அருள் நிறைந்த மரியே…….. 1 முறை
தந்தைக்கும் மகனுக்கும் தூய………. ஆமென்.

ஒருவர்: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்
ஒருவர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவன
மக்கள்: ஆமென்.

பனிரெண்டாம் ஸ்தலம்
இயேசு சிலுவையில் மரிக்கிறார்

ஒருவர்: திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்
மக்கள்: அது ஏனென்றால் உமது பாராமான திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார்” – எபேசியர் 2:16

மரணம் என்றால் எல்லோருக்குமே பயம்தான். ஏனென்றால் அதன்பின் என்ன என்று உறுதியாக யாருக்கும் தெரியாது. அதன் பின் என்ன? என்ற கேள்வி, பயத்தை மட்டுமே உருவாக்கும். ஆனால், இயேசுவுக்கு மரணம் பயமில்லை. ஏனெனில் மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்று இயேசு மூன்றுமுறை தன் சீடர்களுக்கும் உலகிற்கும் உரக்க அறிவித்திருந்தார். இதோ உண்மை இப்போது தலை சாய்த்து உறங்குகின்றது.
அன்பு மகனே ! மகளே !
எதிர்காலம் குறித்த உன் கவலைகள் உன்னை பயப்படுத்தும், கோழையாக்கும், சுயநலவாதியாக மாற்றும். எதிர்காலம் குறித்த எச்சரிக்கை வேண்டும். ஆனால் அதை குறித்த கவலை தேவையில்லை. என் மரணம் எனக்கு கவலை இல்லை. மாறாக அது பலருக்கு எச்சரிக்கை, ஆம்! புனித வாழ்விற்கு கடந்து வர எச்சரிக்கை!

செபம்: அன்பு இயேசுவே உம்மோடு நாங்கள் அறையப்பட்டால் உம்மோடு உயிர்ப்போம் என்;னும் உண்மையை புரிந்துகொள்ள அருள்தாரும் ஆமென்.

விண்ணுலகில்; இருக்கின்ற…….. 1 முறை
அருள் நிறைந்த மரியே…….. 1 முறை
தந்தைக்கும் மகனுக்கும் தூய………. ஆமென்.

ஒருவர்: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்
ஒருவர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவன
மக்கள்: ஆமென்.

பதிமூன்றாம் ஸ்தலம்
இயேசு தன் தாய் மரியாவின் மடியில் கிடத்தப்படுகிறார்

ஒருவர்: திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்
மக்கள்: அது ஏனென்றால் உமது பாராமான திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்” – எபிரேயர் 12:2

பத்துமாதம் துடிப்போடு சுமந்த அன்னையின் மடி இப்போது துடிப்பில்லாமல் மௌனமாகிறது. உமது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும். இல்லை, பல வாள்கள் ஊடுருவிற்று. இத்தனை வேதனைகளையும், தம் மௌனத்தால் தாங்குகிறாள் அன்னை மரியாள். உள்ளத்தில் ஆயிரம் கேள்விகளுண்டு, ஆனால் பதிலுக்காக காத்திருக்கிறாள்.
அன்பு மகனே ! மகளே !
புனிதத்திற்கான போராட்ட வாழ்வில் உள்ளத்தை நொறுங்க செய்யும் பல கேள்விகள் மலையாய் உதிக்கும். கெட்டவன் நன்றாகத்தானே வாழ்கிறான்? நல்லவர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? உலகம் நல்லவர்களை அடையாளம் கண்டுகொள்வதில்லையே ஏன்? உத்தமர்களுக்கு ஏன் இத்தனை நொறுக்கல்கள்? இத்தனைக் கேள்விகளுக்கும் பதில் அன்னை மரியாள் மௌனம் தான். காத்திரு. உண்மை வெல்லும்.

செபம்: அன்பு இயேசுவே வாழ்வின் நொறுக்கல்கள் வரும்போது வெடித்து சிதறாமல் உம் அன்னையைப் போன்று மௌனம் காக்க பொறுமை கொள்ள அருள்தாரும் ஆமென்.

விண்ணுலகில்; இருக்கின்ற…….. 1 முறை
அருள் நிறைந்த மரியே…….. 1 முறை
தந்தைக்கும் மகனுக்கும் தூய………. ஆமென்.

ஒருவர்: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்
ஒருவர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவன
மக்கள்: ஆமென்.

பதினான்காம் ஸ்தலம்
இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார்

ஒருவர்: திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்
மக்கள்: அது ஏனென்றால் உமது பாராமான திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

தம் சிலுவையினால் கிடைத்த வெற்றியால் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகியோரின் படைக்கலன்களைக் கிறிஸ்து பிடுங்கிக்கொண்டு அவர்களை இகழ்ச்சிக்குள்ளாக்குமாறு ஊர்வலமாக இழுத்துச் சென்றார்” – கொலோசையர் 2:15

புரட்சியாளனை புதைப்பதாக நினைத்து கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள். ஆனால், புனிதம் இங்கு புதைக்கப்படவில்லை, மாறாக விதைக்கப்படுகிறது. அத்தனையும் நிறைவேறிவிட்டது என்றார்கள், இல்லை, இப்போதுதான் தொடங்க போகின்றது. இத்தனை வருட போராட்ட வாழ்வு மொத்தமாய் இயேசுவின் உயிர்ப்பில் பலன் கொடுக்கப்போகிறது. இதுவரையில் வெற்றிப்பெற்றதாக நினைத்து கொண்டவர்கள், இதோ இயேசுவின் அடக்கத்திற்கு பிறகு ஓவ்வொரு நொடிக்கும் தோற்க ஆரம்பிக்கின்றார்கள்.
அன்பு மகனே ! மகளே !
பல நேரங்களில் தீமை வெற்றிபெறுவதை போல் மாயையை உண்டாக்கும். ஆனால் தீமைக்கு எப்போதும் இறுதிவெற்றி இல்லை. இறுதியில் வெல்லப்போவது உண்மை, சத்தியம் மட்டுமே. தீமைதரும் மாயைக்கு மயங்கி, என் மகனாக, மகளாக வாழ, நீ எடுக்கும் முயற்சிகளில் பின் வாங்காதே. ஏனெனில், இறுதியில் வெல்லப்போவது எனது சத்தியம், எனது உண்மை மட்டுமே

செபம்: அன்பு இயேசுவே இறுதியில் வெல்லப்போகும் உமது நீதிக்காக உண்மைக்காக என் வாழ்வை மாற்றிக்கொள்ள நான் எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதித்து என்றும் உம் பிள்ளையாக வாழ அருள்தாரும் ஆமென்.

விண்ணுலகில்; இருக்கின்ற…….. 1 முறை
அருள் நிறைந்த மரியே…….. 1 முறை
தந்தைக்கும் மகனுக்கும் தூய………. ஆமென்.

ஒருவர்: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி.. எங்கள் பேரில் தயவாயிரும்
ஒருவர்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் இறைவனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாற கடவன
மக்கள்: ஆமென்.
முடிவுரை

அன்புக்குரியவர்களே!
இயேசுவின் சிலுவைபாதையின் வழியில் நடந்து சிந்தித்த நாம் இதோடு நிறுத்தி விட்டேமென்றால் ஏதோ வாடிக்கையாக செய்கின்ற செயலாக மாறிவிடும். சிந்தித்தவைகளை நம் அனுதின வாழ்வுக்கு எடுத்து சென்று உயிர்கொடுப்போம். “கிறிஸ்துவில் என்றும் மரணமில்லை, மாறாக வாழ்வே நிரம்பியிருக்கிறது. என்னில் வாழ்பவர் இயேசுவே” என்ற புனித பவுலின் வார்த்தையை சுதந்தரித்து, நம் வாழ்வை இறைவன் கரங்களில் ஒப்புகொடுப்போம். புனித வாழ்வு நம்மில் மலர, கிறிஸ்து நம்மில் வெளிப்படவேண்டும். அப்போது தான், இறைவனின் விருப்பப்படி நம் வாழ்வு அமையும்.

திருச்சிலுவைப் பாதை – முடிவு செபம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே! கடவுள் வடிவில் விளங்கிய நீர் கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க் வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் உம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானீர். மனித உருவில் தோன்றி சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்ப்படிந்து உம்மையே தாழ்த்திக் கொண்டீர். எனவே, கடவுள் உம்மை மிகவே உயர்த்தி எப்பெயர்க்கும் மேலான பெயரை உமக்கு அருளினார்.
இந்த மறையுண்மைகளை தியானித்த நாங்கள் உமது, திருஇரத்தப் பேறுபலன்களினால் உலக மாயையிலிருந்தும், கவர்ச்சிகளிலிருந்தும், பாவ நாட்டங்களிலிருந்தும், பாவ பழக்கங்களிலிருந்தும், தீய ஆசைகளிலிருந்தும், உலக கவலைகளிலிருந்தும், பகைமை, பேராசை, கோபம், பொறாமை, பழிவாங்கும் எண்ணங்கள், நோய்நொடிகள், அனைத்திலிருந்தும் எம்மை விடுவித்தருளும்.
உமது திருஇரத்ததால் மீட்கப்பட்ட நாங்கள் பரிசுத்தமாய் வாழவும், உம்மில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழவும், குடும்ப உறவில் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ வரம் தந்தருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்.