மீண்டும் பிறப்போம் வா!!!

0
2028

மனிதனால் மீண்டும் பெற முடியாதது இன்னொரு பிறப்பு, இன்னொரு இறப்பு என்பது நாம் நன்கு அறிந்ததே. இதில் எப்படி மீண்டும் புதிதாய் பிறப்பது என்று நீங்கள் கேட்கலாம். அதை தெளிவு படுத்தவே இன்றைய வாசகங்களும் இன்றைய பெருவிழாவும். நமது தாய் திருச்சபை மூவரின் பிறப்பு விழாவை பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றது.

1. அன்னை மரியின் பிறப்பு ( செப்டம்பர் 8 )
2. இயேசுவின் பிறப்பு ( டிசம்பர் 25 )
3. யோவானின் பிறப்பு ( ஜூன் 24 )

Infant Jesus and John the Baptist, Bartolomé Esteban Murillo ...

திருமுழுக்கு யோவான் இயேசுவின் முன்னோடி, புதியஏற்பாட்டின் முதல் இறைவாக்கினர். இவரது வாழ்நாளில் இவர், இவரைச் சார்ந்தவர்களுக்கும் இவரைப் பின்பற்றியவர்களுக்கும் ஏராளமான அறிவுரைகளையும் போதனைகளையும் செய்தவர். ஆனால் இவர் பிறந்த எட்டு நாளிலேயே தன்னை காண வந்த தன் உறவின் முறையாளர்களுக்கு நான்கு விதமான செய்திகளை எடுத்துரைக்கிறார். அவரது பிறப்பு விழாவைக் கொண்டாடி மகிழும் நமக்கும் இந்த செய்தி பொருந்தும்.
1. கடவுள் நம்பிக்கை.
2. உறவுகளின் சங்கமம்.
3. ஒத்த மனம்.
4. கடவுளின் அருஞ்செயல்.

1. கடவுள் நம்பிக்கை;
யோவானின் பெற்றோர்களான செக்கரியா, எலிசபெத் இருவரும் முதிர் வயதினர். பிள்ளைப் பேறு பெற இயலாத நிலையிலும், கடவுள் மீது கொண்ட நம்பிக்கையில் இடைவிடாது வேண்டுகின்றனர். செக்கரியா கடவுளின் திருமுன் தூபம் காட்டும் வேளையிலும் இதே மன்றாட்டுடன் தான் நின்றிருப்பார். இடைவிடாத நம்பிக்கை செயலாக மிளிர்கிறது. மன்றாட்டு கடவுளின் திருமுன் செவிமடுக்கப்படுகிறது. எலிசபெத் தனது முதிர் வயதில் குழந்தையை பெற்றெடுக்கிறார். நாமும் பல வேளைகளில் பல மன்றாட்டுக்களுடன் கடவுளின் திருமுன் செபிக்கிறோம். நமது செபங்களும் விண்ணப்பங்களும் பெரும்பாலும் கால வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. இந்த மாதத்திற்குள் எனக்கு இது நடந்தேற வேண்டும். இதற்குள் என் செபம் கேட்கப்பட வேண்டும் என்று கடவுளிடமே நாம் டெட் லைன் வைக்கிறோம். சந்தர்ப்பவசமாக அது நடந்தேறினால் மகிழ்ச்சி . இல்லையென்றால் கடவுளே இல்லை அவருக்கு கண் இல்லை காது இல்லை என்று புகழ் பாடல் பாட ஆரம்பித்துவிடுவோம் .
இந்நிலையில் தூய யோவானின் பிறப்பு, நம்பிக்கையோடு செபி உன் விண்ணப்பம் ஒரு நாள் கேட்கப்படும். தாமதமாக வந்தாலும் அது தரமானதாக உன்னை வந்தடையும் என்று நமக்கு அறிவுறுத்துகிறது.

2. உறவுகளின் சங்கமம்;
இது வரை பிள்ளைப் பேறு அற்றவர்கள் என்று யோவானின் பெற்றோர்களை இகழ்ந்த அவரின் உறவினர்கள் இன்று மகிழ்வைக் கொண்டாடக் கூடி வருகின்றனர். முதிர்ந்த வயதில் தனிமையில் தவித்த யோவானின் பெற்றோர்கள் அவர் பிறப்பு மூலமாக இழந்த உறவுகளை மீண்டும் பெறுகின்றனர். புது குடும்பமாக மாறுகின்றனர். உறவுகள் நம் வாழ்வு என்னும் உடம்பின் நரம்புகள். நம் உடம்பின் அனைத்து பாகங்களும் நலமுடன் இருக்க இரத்தத்தை எடுத்துச்செல்லும் பணியாளர்கள். அவ்வாறே நமது உறவினர்களும் நமது வாழ்க்கை நலமாக அமைய நமக்கு நன்மைகள் பலவற்றைக் கற்றுத்தரும் செயல் ஊக்கிகள். இன்று நம்மிடையே பெரும்பாலும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை மறைந்து போன ஒன்றாக மாறிவிட்டது. அதற்கு காரணம் அனைவரும் சொல்வது மனைவிக்கு கணவனின் வீட்டாரைப் பிடிப்பதில்லை. எனவே அவர்களோடு சேர்ந்து வாழ விருப்பமில்லை . எனவே தனிக்குடித்தனம். உங்களுக்கு நான் முக்கியமா இல்லை உங்கள் குடும்பம் முக்கியமா என்று கேட்டு பிரிந்து போகும் மனைவிகளை நான் குற்றம் சொல்ல மாட்டேன். அவர்களும் அந்த குடும்பத்தில் ஒருவர் தான் என்பதை மனைவிகளுக்கு புரிய வைக்காத கணவன்களின் தவறு தான் இது என்று கூறுவேன். இப்படிப்பட்ட நிலையில் யோவானின் பிறப்பு, பெயர் சூட்டு நிகழ்வு உறவுகள் அனைவரையும் கூடி வரச்செய்கின்றது. நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு, என்று தோள் கொடுக்கும் உறவுகளும் நமக்கு தேவை என்பதை இவர் பிறப்பு நமக்கு எடுத்துரைக்கிறது.

3. ஒத்த மனம்;
ஒருவரது வம்ச வளர்ச்சி அல்லது பரம்பரை பெயர் நிலைக்க குழந்தைக்கு அவர் தந்தையின் பெயரையோ அல்லது மூதாதையர்களின் பெயரையோ வைப்பது வழக்கம். அப்படியே கூடி இருந்த உறவினர்களும் எண்ணி இருக்கின்றனர். ஆனால் தாயாம் எலிசபெத் அக்குழந்தைக்கு யோவான் என பெயரிடச்சொல்கிறார். பெண்களை மதிக்காத சமூகம், அவரை விடுத்து தந்தையாம் செக்கரியாவிடம் தங்கள் விருப்பத்தை எடுத்துரைக்கின்றனர். அவரும் அக்குழந்தைக்கு யோவான் என்று பெயரிட வேண்டும் என்று கூறுகின்றார். வயது முதிர்ந்த நிலையிலும் கணவன் மனைவி இருவரும் ஒத்த மனது உடையவர்களாக இருப்பதைக் கண்டு வியக்கின்றனர் உறவினர்கள். இது யாருடைய பெயர் என்ற வியப்பு இரண்டாம் பட்சமாக மாறுகிறது. திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் நிம்மதியாக வாழ இரண்டு வழிகள். விட்டுக் கொடு இல்லையென்றால் விட்டு விடு . இதை செய்ய மறப்பதாலேயே ஏராளமான குடும்பங்கள் பிரிகின்றன. யோவானின் பிறப்பு இதன் மூலம் நமக்கு விடுக்கும் செய்தி இது தான். துறவறமானாலும் இல்லறமானாலும் உடன் வாழ்பவர்களுடன் மனமொத்து வாழ வேண்டும் . விட்டுக் கொடுங்கள் இல்லையென்றால் விட்டு விடுங்கள்.

4. கடவுளின் அருஞ்செயல்:
வாய் பேச முடியாத செக்கரியா, யோவான் எனும் பெயர் சூட்டப்பட்டவுடன் நா கட்டவிழ்ந்து பேச ஆரம்பிக்கிறார். கடவுளால் ஆகாதது எதுவுமில்லை என்பதை எடுத்துரைக்கிறது இந்த செயல். சிலர் மகிழ்வில் எனக்கு வாயடைத்து போனது என்பர், சிலர் துக்கம் தொண்டையை அடைக்கிறது என்னால் பேச முடியவில்லை என்பர். ஆக அதிக இன்பமோ துன்பமோ முதலில் தடைபடுவது வார்த்தைதான். ஆனால் இங்கு எதிர்மாறாக அதிக மகிழ்வில் கடவுள், செக்கரியாவிற்கு கட்டப்பட்ட நாவினை அவிழ்க்கிறார். கடவுளின் அருஞ்செயலை பிற மக்களுக்கும் எடுத்துரைக்க அறிவுறுத்துகிறார். கடவுளின் வல்லமை யாருக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் எந்த வயதிலும் நிறைவேற்றப்படலாம் என்பதை யோவானின் பிறப்பு நமக்கு உணர்த்துகிறது. .

நாமும் பிறந்தோம். வளர்ந்தோம். வாழ்கிறோம். யோவானின் பிறப்பு அவரது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் நல்ல செய்தியைக்கொண்டு வந்தது. யோவானின் பிறப்பு இயேசுவுக்கு முன்னோடி என்ற ஒரு இலக்கை உடையதாயிருந்தது. நமது பிறப்பின் நோக்கம் என்ன? நமது இலக்கு என்ன? என்று சிந்திப்போம். உடலளவில் பிறப்பது ஒரு முறை என்றாலும் மனதளவிலும் நல்லெண்ணத்தளவிலும் நாம் தினந்தோறும் பிறந்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அப்போதும் நோக்கமும் இலக்குமின்றி அந்நாளையும் வீணாய் கழிக்கிறோம். மீண்டும் பிறப்போம் தினமும் நல்லெண்ணத்தோடு. நல் இலக்கோடு , நல் நோக்கத்தோடு . நாமும் நமக்கு பின் வரும் இயேசுக்களுக்கு வழியை ஆயத்தப்படுத்தும் யோவான்களாய் திகழ்வோம். யோவான் இஸ்ரயேல் மக்களுக்கு தன்னை வெளிப்படுத்தும் நாள் வரை பாலைவனத்தில் தன்னை மறைத்துக் கொண்டார். நாமும் நம்மை நமக்குள் மறைப்போம். புதிய யோவான்களாய் அனுதினமும் பிறக்க, நம்மை சார்ந்தவர்களுக்கு கடவுள் நம்பிக்கையையும், உறவுகளின் சங்கமத்தையும், கடவுளின் அருஞ்செயல்களையும் ஒத்த மனமுடையவர்களின் வாழ்க்கை நலத்தையும் எடுத்துரைக்கக் கூடியவர்களாய் வாழ்வோம் . இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென்.