புனித மாக்ஸ்மில்லியன்

0
2279

புனித மாக்ஸ்மில்லியன் மரிய கோல்பே 1894ஆம் ஆண்டு சனவரி 8ஆம் நாள் போலந்து நாட்டில் பிறந்தார். இவரது திருமுழுக்குப் பெயர் ரைமண்ட். இவருடைய பெற்றோர் ஜீலியஸ் மற்றும் மரிய கோல்பே ஆவார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கோல்பே படிக்க வசதியின்றி வீட்டில் தனது தாய்க்கு உதவியாக இருந்தார். கோல்பேயின் அறிவுத் திறனைப் பார்த்த அவ்வூர் மருத்துவர் ஒருவர் அவரின் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றார்.
அன்னையின் மீது தீராத பக்தி கொண்டிருந்த கோல்பேவிற்கு அவரது 12வது வயதில் அன்னை மரியாள் இரண்டு கிரீடத்துடன் காட்சியளித்தார். வெண்மை நிறம் கொண்ட கிரீடம் தூய்மையையும், சிகப்பு நிறம் கொண்ட கிரீடம் இரத்த சாட்சியாக மரிப்பதையும் குறிக்கும் புனித கோல்பே இரண்டு கிரீடத்தையும் தேர்ந்தெடுத்தார்.
பள்ளிக் கல்வியை முடித்து அவர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து 1919 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். சிறுவயதிலிருந்தே அமலோற்பவ அன்னையிடம் அதிகமான பக்தி கொண்டிருந்த கோல்பே “இமாக்குலேட் நகர்” என்னும் நகரை தோற்றுவித்தார். அங்கே “நைட் ஆப் தி இமாக்குலேட்” என்னும் பத்திரிகையை நடத்தினார். அதற்கு ஆயிரக்கணக்கான வாசகர்கள் சேர்ந்தனர். அதன் வழியாக அவர் ஆண்டவர் இயேசு பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து வந்தார். 1930 ஆம் ஆண்டு ஜப்பான் மற்றும் இந்தியாவிற்கு மறைபரப்புப் பணிக்காகச் சென்றார். ஜப்பானில் “கார்டன் ஆப் இமாக்குலேட்” என்னும் நகரைத் தோற்றுவித்து நற்செய்தியை அறிவித்து வந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு சொந்த நாட்டிற்குத் திரும்பினார். அக்காலத்தில் யூதருக்கு எதிரான கிட்லரின் அடக்குமுறை தொடங்கியது. யூதர்கள் என்று யாரெல்லாம் கண்ணில் தென்பட்டனரோ அவர்களையெல்லாம் நாசிப் படைகள் கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதைச் செய்து கொன்றது. ஆஸ்விட்ஸ் எனப்படும் இடத்தில் யூதர்களுக்கு ஆதரவு அளித்து வந்ததை அறிந்த நாசிக்படை 1939 ஆம் ஆண்டு கோல்பேயை கைது செய்து சிறையில் அடைத்தது. சிலமாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட கோல்பே மீண்டும் 1941 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சித்திரவதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டார். இம்முறை அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானார்.
சிறையில் இருந்தபொழுது சிறைவாசிகளுக்கு நற்செய்தியை அறிவித்து வந்தார். ஒரு நாள் இவருடன் சிறைகூடத்தில் இருந்த கைதி ஒருவர் ஓடிவிட்டார். இதை அறிந்த சிறைகண்காணிப்பாளர் சிறைகூடத்தில் இவருடன் இருந்த பத்துபேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மரணதண்டனை விதித்தார். அதில் பிரான்சீஸ் கஜோவ்னிக்ரேக் என்பவர், சிறை அதிகாரியிடம் நான் இறந்தால் என் மனைவி பிள்ளைகளை யார் காப்பாற்றுவது என்று கதறி அழுதார். இதைப் பார்த்த கோல்பே பிரான்சிசின் மீது இரக்கம் கொண்டு “ இவருக்காக நான் சாவை ஏற்றுக் கொள்கிறேன்” என்று முன்வந்தார்.
மரணதண்டனை விதிக்கப்பட்ட கோல்பே முதலில் பட்டினி சாவுக்கு கையளிக்கப்பட்டார். பின்பு 1941 ஆம் ஆண்டு விச ஊசி போடப்பட்டு “தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” என்ற இறைவாக்குக்கேற்ப தன் இன்னுயிரைத் துறந்தார்.
புனித கோல்பேவிற்கு 1971ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் திருத்தந்தை ஆறாம் பவுலினால் அருளாளர் பட்டமும், 1982ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால் புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது.
புனித மாக்ஸ்மில்லியன் மரிய கோல்பே அவர்களை நமது திருஅவை குடும்பங்கள், சிறைக்கைதிகள், பத்திகையாளர்கள், அரசியல் சிறைக்கைதிகள், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஆகியோருக்கு பாதுகாவலராக நியமித்துள்ளது.
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் இவரை “திருச்சபையின் கடின நூற்றாண்டின் பாதுகாவலராக” அறிவித்தார்.

– திருமதி. ரோஸ்லின் மார்ட்டின்