பிரச்சனையை அணுக…
நாம் நம் வாழ்வில் எதிர்பாராத பிரச்சனைக்குள் அகப்படும்போது, பதற்றமும், பரபரப்பும் அடைகிறோம். அதனால் நம்மை அறியாமலேயே பிரச்சனையின் தன்மையை அதிகரித்துவிடுகிறோம்
ராஜேஷ், சோமு இவ்விரும் நண்பர்கள். ராஜேஷ், சிறுவயது முதல் நகரத்தில் வாழ்பவன். சோமு கிராமத்தில் வாழ்பவன். ஒரு நாள் ராஜேஷ் தன் நண்பனைப் பார்ப்பதற்கு கிராமத்திற்குச் சென்றிருந்தான். அன்று மாலையில் அவ்விருவரும் ஓர் ஆற்றின் கரையில் நடந்துபோய்க்கொண்டிருந்தனர். அப்போது அந்த ஆற்றைக் கடந்து மறுபக்கத்திற்குச் செல்வதற்காக, அந்த ஆற்றிலிருந்த மரப்பாலத்தின் வழியே இருவரும் சென்றார்கள். அப்போது ராஜேஷ் கால்தவறி ஆற்றில் விழுந்துவிட்டான். அவனுக்கு நீச்சல் தெரியாது. எனவே தண்ணீரில் தத்தளித்தான். சோமு, என்னைக் காப்பாற்று, காப்பாற்று என்று கத்தினான் ராஜேஷ். அதற்கு சோமு, நீயே உன்னைக் காப்பாற்றிக்கொள், முயற்சிசெய் என்று சொன்னான். அப்போது ராஜேஷ், அறிவற்றதனமாய் சொல்லாதே. எனக்கு நீச்சல் தெரியாது என்று உனக்குத் தெரியுமே என்று சொன்னான். அதற்கு சோமு, நீ இருக்கின்ற இடம் ஆழமில்லாத இடம். உன் காலை தரையில் ஊன்று. எல்லாம் சரியாகி விடும் என்று சொன்னான். ராஜேசும் சோமு சொன்னதுபோல் செய்தான். தண்ணீர் மார்பளவு மட்டுமே இருந்தது. அவனும் கரையேறினான்.
![](https://i0.wp.com/d1ielco78gv5pf.cloudfront.net/assets/clear-495a83e08fc8e5d7569efe6339a1228ee08292fa1f2bee8e0be6532990cb3852.gif?w=696&ssl=1)
நாம் நம் வாழ்வில் எதிர்பாராத பிரச்சனைக்குள் அகப்படும்போது, ராஜேஷ் போன்று பதற்றமும், பரபரப்பும் அடைகிறோம். அதனால் நம்மை அறியாமலேயே பிரச்சனையின் தன்மையை அதிகரித்துவிடுகிறோம். இந்நிலை பிரச்சனையை சரியான கண்ணோட்டத்தில் நோக்கவிடாமல் செய்வதோடு, உள்உணர்வுக்கும் நம்மைச் செவிகொடுக்கவிடாமல் தடுக்கிறது. மேலும், அந்நேரத்தில் நமது மனநிலையும் சரியாக இல்லாததால், பிரச்சனையின் ஆழத்தையும் அகலத்தையும் இன்னும் அதிகமாக்கி விடுகிறோம். அதனால் அதற்குக் கொடுக்கும் தீர்வும் சரியானதாக அமைவதில்லை. எனவே எந்த பிரச்சனையை எதிர்கொண்டாலும் பதற்றப்படாமல், கடவுள் கரத்தில் ஒப்படைப்போம். (நன்றி – இன்றைய சிந்தனை)