அனுதின ஜெபங்கள்

0
7139

காலை எழுந்தவுடன் செபம்

எல்லாம் வல்ல இறைவா! அனைத்திற்கும் முதலும் முடிவுமான ஆண்டவரே! உம்மை ஆராதிக்கிறேன். என்னை உண்டாக்கி, கிறிஸ்தவனாக்கி, உம் ஒரே மகனின் இரத்தத்தால் என்னை மீட்டதோடு இந்த இரவு நேரத்தில் என்னைக் காப்பாற்றிய உமது கருணைக்காக என் முழுமனதோடு உமக்கு நன்றி கூறுகிறேன். இன்று பாவத்தில் விழாமல் என்னைக் காப்பாற்றி, எல்லாத் தீமைகளிலிருந்தும் மீட்டருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன

அன்னை மரியே என் அன்புத் தாயே! இறைவனின் புனிதர்களே எனக்கு இறைவனிடமிருந்து மீட்பையும் அருட்கொடைகளையும் பெற்றுத் தாருங்கள். மன்றாட்டின் பலனால் உங்கள் அனைவரோடும் நான் முடிவில்லாமல் கடவுளின் புகழ்பாடி மகிழ்ந்திருக்கும் பேறு எனக்குக் கிடைப்பதாக.

மூவேளைச் செபம்

ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார்;
அவள் தூய ஆவியினால் கருத்தரித்தாள். – அருள் நிறை.
இதோ ஆண்டவருடைய அடிமை
உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும். – அருள் நிறை.
வார்த்தை மனுவுருவானார்
நம்மிடையே குடிகொண்டார். – அருள் நிறை.
முதல் : இயேசுகிறிஸ்து நாதருடைய வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும் படியாக,
எல்: இறைவனுடைய தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:
சர்வேசுரா சுவாமி! சம்மனசு சொன்னதினாலே உமது திருமகனாகிய இயேசுகிறிஸ்து மனிதனானதை அறிந்திருக்கிற நாங்கள் அவருடைய பாடுகளினாலேயும் சிலுவையினாலேயும் உத்தானத்தின் மகிமையை அடையத்தக்கதாக எங்களுக்கு அனுக்கிரகம் பண்ணியருள வேண்டுமென்று தேவரீரை வேண்டிக்கொள்கிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் இயேசுகிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்- ஆமென்.

காவல் தூதரை நோக்கி செபம்

எனக்குக் காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே ! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து வழிநடத்தி ஆண்டருளும். -ஆமென்.

அனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம்
தெய்வீகத் தொழிலாளியாகிய இயேசுவே, அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும், தொழில்களையும், எனக்கு ஏற்படும் களைப்பு,ஆயாசம், துன்ப வருத்தங்கள் அனைத்தையும், தொழிலாளிகளின் மனந்திரும்புதலுக்காகவும், அர்ச்சிப்புக்காகவும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். -ஆமென்.

இயேசுவின் திரு இருதயமே, உமது அரசு வருக !
நாசரேத்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இரவு ஜெபம்
எல்லாம் வல்ல இறைவா, என் களைப்பை நீக்கி எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். இன்றைய நாள் முழுவதும் நான் பெற்றுக் கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும், உம்மைப் போற்றுகின்றேன். என் பாவங்கள் உம்முடைய அளவில்லாத மகிமைக்கும், நன்மைத் தனத்திற்கும் விரோதமாயிருப்பதால் இவைகளை மனம் நொந்து வெறுக்கின்றேன். என் பாவங்களையெல்லாம் மன்னிக்கும்படி உம்மைப் பணிந்து வேண்டுகின்றேன். இந்த இரவில் என்னைத் திடீர் மரணத்திலிருந்தும், தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும்.

மூவொரு இறைவா, என்னை முற்றிலும் உமக்களிக்கின்றேன். குறிப்பாக என் மரண நேரத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன். இப்போதும், எப்போதும் உம் அருள் பிரசன்னத்தால் என்னை நிரப்பியருளும். என் இறுதி நேரத்தில் உம்மைச் சந்திக்க மிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருந்து என் உயிர் பிரியவும், உம் நித்திய பேரின்பப் பாக்கியத்தில் என்னை ஏற்றுக் கொள்ளவும், கருணை புரிந்தருளும். என் ஆத்துமத்தையும், சரீரத்தையும் இன்றிரவு உம் அன்பின் கரங்களில் ஒப்புக் கொடுக்கின்றேன். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும். என் நல்ல காவல் தூதரே! என் பக்க பலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும். – ஆமென்.