நோயில்பூசுதல்

0
2320

நோயில்பூசுதல் என்னும் திருவருட்சாதனமானது குணப்படுத்தும் திருவருட்சாதனம். மனிதனின் நோயும் இறப்பும் கடவுளின் திட்டத்தில் இருந்ததில்லை. இயேசுவே பல முறைகளில் நோயுற்றவர்களை குணமாக்குவதையும், இறந்தோரை உயிர்ப்பிப்பதையும் நற்செய்தியில் நாம் காண்கிறோம்.

தாய் திருச்சபையும் நோயுற்றோருக்கு சிறப்பான பணியைச் செய்யக் காத்திருக்கின்றது. நோயுற்றோர்க்கு நற்கருணை வழங்குவதிலும், நோயுற்றோரை மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ சென்று பார்த்து வருவது குருக்களின் முக்கிய கடமையாகும். உடலும் ஆன்மாவும் சேர்ந்ததுதான் மனிதன். மனிதனின் உடல்நலத்திலும் ஆன்மீகநலத்திலும் நலம் பெற்று வாழ திருச்சபை பல்வேறு வகைகளில் உதவிசெய்கிறது.

நாம் சுகவீனமுற்றிருக்கும் போது பயப்படுகிறவர்களாகவும் மனத்தளவில் சோர்வுற்றவர்களாகவும் காணப்படுகிறோம். பலவேளைகளில் கடவுள் நம்மோடிருக்கிறார் என்பதை மறந்து விடுகிறோம். நமது சுகவீனத்தில் இயேசுவே நமக்கு துணையாய் இருந்து நமக்கு பலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறார். அதுவும் நோயில் பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தின் வழியாக நமக்கு நற்சுகத்தையும் ஆன்ம பலத்தையும் கொடுக்கிறார்.

இயேசு தம் பன்னிரு சீடர்களைச் சுற்றிலுமுள்ள ஊர்களுக்கு அனுப்பினார். அவர்கள் புறப்பட்டுச் சென்று, மக்கள் மனம் மாற வேண்டும் என்று பறைசாற்றினார்கள். பல பேய்களை ஓட்டினார்கள். உடல் நலமந்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள் (மாற்கு6 ; 12, 13)

இவ்விதம், நோயில் பூசுதல் திருவருட்சாதனத்தை இயேசு நிறுவினார் என்று அறிகிறோம்.

புனித யாகப்பரும் இதை உறுதிபடுத்தி, பரிந்துரைக்கிறார்; உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால் திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவர். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். (யாக்.5 ; 14, 15) சாவின் ஆபத்தில் இருக்கத் தொடங்கும் போதே அத்தருணம் இந்த அருட்சாதனத்தைப் பெறும் சரியான நேரம் என உறுதியாகச் சொல்லலாம் (திருவழிபாடு 73)

இந்த அருட்சாதனத்தால் இறை நம்பிக்கை வளர்கிறது, இறப்பின் போது ஏற்படும் கவலைகளையும் சோதனைகளையும் தாங்க உறுதியான அருள், இறைவனின் திருவுளமாயின் நோயினின்று விடுதலை, பாவமன்னிப்பு, கழுவாய் கிடைக்கின்றன.