கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை:
திருமுழுக்கு, உறுதிப் பூசுதல், நற்கருணை ஆகிய மூன்றும் புகுமுக திருவருட்சாதனங்கள். இவற்றின் வழியாகவே நாம் “இருளின் அதிகாரத்தினின்று விடுவிக்கப்பட்டு , கிறிஸ்துவோடு இறந்து, அவரோடு உயிர்க்கிறோம்; சுவிகாரப் பிள்ளைகளுக்கு உரிய ஆவியாரைப் பெற்றுக் கொள்கிறோம்; இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து ஆண்டவருடைய சாவு, உயிர்ப்பு இவற்றின் நினைவாகக் கொண்டாடுகிறோம்” (மறை அறிவிப்புப் பணி, 14)
திருப்பலி கிறிஸ்தவ வாழ்வின் ஆதாரமும் கொடுமுடியுமாகும். அனைத்து மற்ற அருட்சாதனங்கள் இதோடு பிணைக்கப்பட்டுள்ளன. குருவானவர் திருப்பலி நிறைவேற்றும் போது கோதுமை அப்பமும் திராட்சை இரசமும் மெய்யாகவே இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகிறது என்பதே கத்தோலிக்க விசுவாசம். மற்ற திருவருட்சாதனங்களில் கடவுளின் கொடைகளை நாம் பெறுகிறோம். ஆனால் நற்கருணை என்னும் இத்திருவருட்சாதனத்தில் கடவுள் தம்மையே நமக்குத் தருகிறார்.
நற்கருணை என்னும் இத்திருவருட்சாதனம் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது; திருப்பலி, பலிப்பூசை, திருப்பலி கொண்டாட்டம், திருப்பலி வழிபாடு. திருமுழுக்கு நம்மை உயிருள்ள ஆலயத்தின் உயிருள்ள கற்களாக ஆக்குகிறது. அந்த ஆலயத்தில் கிறிஸ்துவையே இறைவனுக்குகந்த பலிப்பொருளாக ஒப்புக் கொடுப்பதே நற்கருணை வழிபாடு. கிறிஸ்துவே ஆலயம், அவரே குரு, அவரே பலிபீடம், அவரே செம்மறி! நாம் அவரோடு இணைந்து, அவரில் இத்தனையும் ஆகிறோம்.
அன்பின் பலி:
இயேசு கிறிஸ்து தம்மையே கல்வாரியில் பலியாக்கப் போவதின் முன் அடையாளமாக நற்கருணையை ஏற்படுத்தினார். இயேசு சிலுவையில் நமக்காக உயிர் தியாகம் செய்ததை இந்த திருப்பலியில் நினைவு கூர்கிறோம். ஏனெனில் தாம் சாவதற்கு முந்திய நாள் இரவில் அப்பத்தை எடுத்து அதைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூரியதாவது : “அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் எனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்” என்றார் அவ்வண்ணமே திராட்சை இரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது: “அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்; ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்.இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார்.
எனவே திருப்பலி என்பது அன்பின் உன்னத பலி. பழைய எற்பாட்டின் பலிகள் அனைத்திலும் மேலான பலி. இயேசு கிறிஸ்துவின் மேலான அன்பை இதில் நினைவுகூர்கிறோம். இத்தகைய அன்பின் திருவிருந்தில் நாம் பங்குகொள்ளும் போது அவருடைய பலியில் நாமும் பங்குகொள்கிறோம். கிறிஸ்து தம்மையே வானகத் தந்தைக்கு பலியாகத் தந்தார். இந்த அன்புப் பலியில் நாமும் பங்குபெறும் போது நாமும் நம்மையே வானக தந்தைக்கு பலியாக ஒப்புக்கொடுக்கிறோம்.
திருவிருந்தில் ஒருமைப்பாடு:
மேலும் திருப்பலியின் பகுதியாகிய நற்கருணை விருந்தில் நாம் பங்கு பெறும் போது நாம் அனைவரும் கடவுளின் அன்புமக்கள் ஆகிறோம். எவ்வித வேறுபாடுமின்றி, நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகள் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. திருப்பலி முடிந்ததும் “திருப்பலி முடிந்தது, இனி நமது வாழ்க்கைப் பலியைத் தொடர்வோம்” என்னும் அறைகூவலுக்கு ஏற்ப கிறிஸ்து காட்டிய அன்பை நமது என்றாட வாழ்வில் காட்ட அழைக்கப்படுகிறோம்.
கத்தோலிக்கத் திருச்சபையில் திருப்பலி என்னும் இந்த திருவருட்சாதனம் உலகம் முழுவதும் ஒரே முறையில் கொண்டாடப்படுகிறது. ஒருவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த மொழியில் திருப்பலி நடைபெற்றாலும், மொழி தெரியாவிட்டாலும் கூட அதில் முழுமையாகப் பங்குபெற முடியும். உலகம் முழுவதும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வாசகங்களுடன் குறிப்பிட்ட திருநாளாக இருந்தால் அதே வழிபாட்டுடன் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் பல்வேறு நேரமாயிருப்பதால் உலகெங்ககும் எந்த ஒரு மணித்துளியும் விடாமல் திருப்பலி தொடர்ந்து கொண்டாடப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.