ஒப்புரவு வழிபாடு

0
3124

முன்னுரை:

திருமுழுக்கு, நற்கருணை, உறுதிப்பூசுதல் வழியாக நாம் கடவுளின் அருளைபெற்று கிறிஸ்துவில் புதுவாழ்வு வாழ அழைக்கப்பட்டிருந்தாலும், சோதனைகள், மனித பலவீனம், உலக துன்பங்கள், மாயக் கவர்ச்சிகள், பேராசை, சுயநலம் ஆகியவை மனிதரை பாவத்தில் விழத்தாட்டுகின்றன. ஆனால் இறைமகன் இயேசு நம்மை ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாக பாவத்திலிருந்து மீட்டு புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்.

ஒப்புரவு அருட்சாதனம் பாவசங்கீத்தனம், பச்சாதாபம், என்றும் அழைக்கப்படுகிறது.

இறைவார்த்தையில் ஒப்புரவு;

“மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்!” (மாற்.1 ; 15) எனும் முழக்கத்தோடு இயேசு தம் மீட்புப் பணியைத் தொடங்கினார். உயிர்த்தபின், தம் சீடர்களின் மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா!” (யோ. 1 ; 22-23) என்று கூறி ஒப்புரவு அருளடையாளத்தை ஏற்படுத்தினார்.

இறைவனின் இரக்கப் பெருக்கால் நாம் ஒப்புரவைப் பெறும்போது, நம்மை முதலில் அன்பு செய்தவரான பரம தந்தையிடம் திரும்புகிறோம். (1யோ. 4 ; 19) நமக்காகத் தம்மையே கையளித்த இயேசுவிடம் திரும்பி வருகிறோம். (கலா.2 ; 20, எபே. 5 ;25), நம் மீது ஏராளமாய்ப் பொழியப்படும் தூய ஆவியிடம் திரும்பி வருகிறோம். (தீத்து 3 ; 6) இவ்வாறு, இறைவனோடு ஒப்புரவாகும் நாம், திருச்சபையோடும் அதன் உறுப்புகளான நம் சகோதரர்களோடும் ஒப்புரவாகின்றோம்.

முக்கிய கூறு:
ஒப்புரவு அருட்சாதனத்தின் மையக்கூறு பாவத்திற்காக மனம் வருந்துதல். மனம் வருந்துதல் இன்றி பாவமன்னிப்பு இல்லை. பாவங்களை மன்னிப்பது கடவுளே. குருவானவர் இங்கே கடவுளின் பிரதிநிதியாக செயல்படுகிறார். நாம் மனமுவந்து இவ்வருட்சாதனத்தை பெற செல்வதே நாம் நம் பாவங்களுக்காக வருந்தும் ஒரு அடையாளமாக இருந்தாலும் குருவிடம் நாம் செய்த பாவங்களுக்காக மனம் வருந்துவதாக அறிக்கை இடுவது போற்றுதற்குறிய செயல். நாம் குருவிடம் அறிக்கையிட்ட பாவங்களை அவர் நினைவில் கொள்வதுமில்லை, அடுத்தவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுத்துவதுமில்லை என்பது நிச்சயம்.

பாவம் என்பது என்ன?
கடவுளின் அன்பைப் புறக்கணிப்பது பாவம். கடவுளின் அன்பை நாம் எவ்வாறு புறக்கணிக்கமுடியும்? கடவுள் அன்பே வடிவானவர். அந்த அன்பின் வெளிப்பாடு இயேசு கிறிஸ்து. கிறிஸ்தவர்களான நாமும் அதே அன்பில் வாழ அழைக்கப்படுகிறோம். இத்தகைய அன்பில் வாழாமல் சுயநலத்திலும், உலக இன்பத்திலும் முழ்கி, கடவுள் நமக்கு கொடுத்த அன்புக் கட்டளைக்கு எதிராக செயல்படும்போது கடவுளின் அன்பைப் புறக்கணிக்கிறோம். நம்மை அன்பு செய்யும் கடவுளுக்கு எதிராகவும், அன்புசெய்து வாழவேண்டிய சகோதர சகோதரிகளுக்கு எதிராகவும் பாவம் செய்கிறோம்.

பாவத்தில் கனாகனம் உண்டா?
உண்டு. அற்ப காரியத்திலோ அல்லது முழு ஈடுபாடில்லாமலோ, அல்லது அறியாமையிலோ நாம் செய்யும் தவறுகள், குற்றங்கள் அற்ப பாவம். எடுத்துக்காட்டு -நமது சௌகரியத்திற்காக சிறு பொய் சொல்லுதல்(அடுத்தவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாது). கடவுளின் உறவில் பாதிப்பு ஏற்படுத்தினாலும் எழிதாக மீண்டும் அன்புறவை ஏற்படுத்திக் கொள்ள இயலும்.

கனமான காரியத்தில், மனம் பொருந்தி, முழு ஈடுபாட்டுடன், பாவம் என அறிந்தும் அதைச் செய்வது சாவான பாவம். எடுத்துக்காட்டு: மனமறிந்து மோக பாவம் செய்வது, கொலை செய்வது, போன்றவையாகும். (அடுத்தவர்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்க கூடிய செயல்கள் அனைத்தும்) இவை நமது ஆன்மாவை முற்றிலுமாக சாவுக்கு இட்டுச் செல்லும் காரியங்கள். கடவுளோடு உள்ள அன்புறவு முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையை ஏற்படுத்துகிறது.

எவ்வாறு இந்த அருட்சாதனத்தை பெறுவதற்கு தயாரிப்பது?
சரியான ஆன்ம சோதனை செய்து பார்த்து அப் பாவங்களுக்காக மனம் வருந்தவேண்டும்.

ஆன்ம சோதனை இரு முறைகளில் செய்யலாம்:

1. பத்து கட்டளைகளை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்து பாவங்களை நினைவிற்கு கொண்டு வருதல்.

2. கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு நிலையை ஆராய்ந்து பார்த்தல்; அடுத்தவர்களுக்கும் நமக்கும் உள்ள உறவு நிலையை ஆராய்ந்து பார்த்தல்; தன்னிலை செயல்களை ஆராய்ந்து பார்த்தல்.

ஒப்புரவு பெறும் முறை என்ன?

  • செய்த பாவங்களை நினைவில் கொண்டு வருதல்.
  • அவற்றிற்காக மனம் வருந்துதல்.
  • இனி பாவம் செய்வதில்லை என்று தீர்மானித்தல்.
  • குருவிடம் பாவங்களை அறிக்கையிடுதல்.
  • நாம் பாவ மன்னிப்பு அடைந்துள்ளோம் என்பதைக் காட்ட நமக்கு தீமை செய்தோரை நாமும் மன்னித்தல்.

Faith Bible Church: Evansville, IN > Sermonsமாதிரி ஆன்ம சோதனை:

1. உன் ஆண்டவராகிய கடவுள் நாமே. நம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை

எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளுக்கு முதலிடம் தந்தேனா?
பிற தெய்வங்களுக்குத் துதி பாடினேனா? வணங்கினேனா?
மாந்தரீகம், மூட நம்பிக்கை, ஜோதிடம், பில்லி, சூனியம் போன்றவற்றிற்கு இடம் கொடுத்தேனா?
என்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தை பிறர் முன் காட்டத் தயங்கினேனா?
துன்ப நேரத்தில் கடவுளுடைய அன்பு, பராமரிப்பில் நம்பிக்கை இழந்தேனா?

2. கடவுளின் திருப்பெயரை வீணாகச் சொல்லாதே.

கடவுளுடைய திருப்பெயரை வீணாகச் சொல்லியிருக்கிறேனா?
இறைவனின் ஆலயத்தை புனிதமாக மதிக்கத் தவறிஇருக்கிறேனா?

3. கடவுளின் நாள்களைப் புனிதமாக அனுசரி.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் குறைந்த பட்ச முயற்சியாக திருப்பலி, திருவிருந்தில் பங்குகொள்ளத் தவறினேனா?
தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டு கடவுளுக்கும், ஜெபிப்பதற்கும் அதிக நேரத்தை செலவுசெய்யத் தவறினேனா?

4. தாய், தந்தையை மதித்துப் பேணு.

என்னுடைய பெற்றேர்களுக்குத் தக்க மரியாதையை கொடுக்கத் தவறினேனா? பணிந்து நடக்காமல் இருந்தேனா?
அவர்களை மதித்து நடந்தேனா? எக்காரியத்திலாவது நான் அவர்களை மனம் நோகச் செய்தேனா?
பெற்றோர்களின் வயதான காலத்தில் அல்லது அவர்களின் முடியாத காலத்தில் அவர்களை மாண்புடனும் என்னால் முடிந்த அளவு அவர்களுக்கு சௌரியங்களைச் செய்து கொடுத்து அன்புடன் நடத்தத் தவறியிருக்கிறேனா? கனிவுடன் பேசத் தவறியிருக்கிறேனா?
என்னுடைய பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய அன்பையும் பாசத்தையும் கொடுக்கத் தவறினேனா?
என்னுடைய குடும்பத்திலுள்ள அனைவருக்கும் என்னால் முடிந்தவரை உதவி செய்து கரிசனையோடு நடக்கத் தவறினேனா?
என்னுடைய அலுவல் மட்டில் என்னுடைய மேல் அதிகாரிகளுக்கு மதிப்புகொடுக்கத் தவறினேனா?
என்னுடைய குடும்ப அளவிலும் அலுவலக அளவிலும் என்னுடைய கடமையை செய்யத் தவறினேனா?

5. கொலை செய்யாதே.

வேண்டுமென்றே பிறருக்குத் தீங்கு செய்தேனா?
பிறருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினேனா?
பிறரைப் பற்றி அவதூறு கூறினேனா?
பிறர் மனம் நோகும் படியாக தீய சொற்கள் பேசினேனா?
யாரையாவது நான் வெறுத்து அவர்களுக்குத் தீயது நடக்கவேண்டும் என்று நினைத்ததுண்டா?
யார்மீதாவது பகைமையும் வஞ்சினத்தையும் நெஞ்சில் கொண்டு மன்னிக்க முடியாமல் இருக்கிறேனா?
நேரடியாகவோ மறைமுகமாகவோ கருக்கலைப்புக்கு ஈடுபட்னேனா? உதவிசெய்தேனா?
தற்கொலை முயற்சி அல்லது எண்ணம் போன்றவற்றில் ஈடுபட்டேனா?
பிறருக்குத் துர்மாதிரியாக செயல்பட்டேனா?
பிற உயிரினங்களை வதைத்தேனா? கொடுமையுடன் நடந்துகொண்டேனா?

6. மோக பாவம் செய்யாதே.

என்னுடைய நடை உடை பாவனைகளில் வீண் கவர்ச்சியைத் தேடியிருக்கிறேனா?
தீய படங்களையோ, புத்தகங்களையோ படித்தேனா? பார்த்தேனா?
தீய எண்ணங்கள் தானாக மனத்தில் தோன்றியபோது அதை உடனடியாக விலக்கமல் இன்பம் அடைந்தேனா?
என்னுடைய சொல்லாலும் செயலாலும் துர்மாதிரியாக நடந்தேனா?
என்னுடைய உடலை தூய ஆவியின் ஆலயம் என மதிக்காமல் சுய இன்பத்தில் ஈடுபட்டேனா?
பிறரை தவரான நோக்கோடு பார்த்தேனா? மனத்தில் எண்ணினேனா? பழகினேனா?
பிறருடைய உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் பேசினேனா? நடந்தேனா? பழகினேனா?
திருமணம் ஆவதற்கு முன் தவறான உறவில் ஈடுபட்டேனா?
திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்துகிறேனா?

7. களவு செய்யாதே.

பிறருடைய பொருட்களுக்கு ஆசைப்பட்டிருக்கிறேனா? எடுத்திருக்கிறேனா?
கண்டெடுத்த பொருளை இன்னாரது பொருள் என்று தெரிந்தபின்னும் தொடர்ந்து வைத்திருக்கிறேனா?
கண்டெடுத்த பொருளை உரியவரிடம் சேர்க்க தக்க முயற்சி செய்யாமல் தொடர்ந்து வைத்திருக்கிறேனா?
பிறருடைய பொருள்களையோ சொத்துக்களையோ வேண்டுமென்று சேதப்படுத்தியிருக்கிறேனா?
பிறருக்கு கொடுக்கப்பட வேண்டிய அல்லது சேர வேண்டிய பொருளையோ பணத்தையோ கபளீகரம் செய்துகொண்டிருக்கிறேனா?
சூதாட்டத்தில் ஈடுபட்டேனா?
களவு செய்யபட்ட பொருள் என்று தெரிந்தும் குறைந்த விலை என்பதற்காக வாங்கி களவு செய்தலை உற்சாகப்படுத்தினேனா?

8. பொய் சாட்சி சொல்லாதே.

என்னுடைய சுயநலத்திற்காக பொய் சொல்லியிருக்கிறேனா?
பொய் என்று தெரிந்தும் அது உண்மை என்று வாதிட்டிருக்கறேனா? சாட்சி கூறினேனா?
பிறரைப்பற்றி புறணி பேசினேனா?
அடுத்வர்களை கேலி, பரிகாசத்துக்குள்ளாக்கி இருக்கிறேனா?
இரகசியம் காக்கப்படவேண்டிய உண்மைகளை தீய உள்ளத்துடன் வெளிப்படுத்தினேனா?
பிறர் செய்த குற்றத்தை அல்லது பாவத்தை பறைசாற்றினேனா?
அடுத்தவர்களை தீர்ப்பிட்டேனா?

9. பிறர் தாரத்தை விரும்பாதே.

திருமணத்திற்குப் பின் என் அன்பை வெளிப்படுத்த தவறிஇருக்கிறேனா?
மனைவியை வெறும் போகப் பெருளாக நடத்துகிறேனா?
கணவர் அல்லது மனைவிக்கு தக்க அன்பையும் மரியாதையையும் உரிமையையும் கொடுக்கத் தவறிஇருக்கிறேனா?
திருமணஉறவிற்கு அப்பாற்பட்டு எனது சிந்தனைகளை வேறு ஒருவரிடம் செலுத்துகிறேனா?
என்னுடைய கணவர் அல்லது மனைவி தவிர்த்து பிறருடன் தவறான உறவில் ஈடுபட்டேனா?
என்னுடைய திருமண உடன்படிக்கையை மீறி வேறு நபருடன் உறவு வைத்துள்ளேனா?
தாம்பத்திய உறவில் திருச்சபையின் போதனையை மீறி நடந்திருக்கிறேனா?

10. பிறர் உடைமையை விரும்பாதே.

அடுத்தவரிடம் காணப்படும் திறமைகளையும், செல்வத்தையும், நற்குணங்களைக் கண்டு பொறாமைப் பட்டேனா?
பிறரை ஏமாற்றி அல்லது நேர்மையற்ற முறையில் பணமோ பொருளோ சம்பாதித்தேனா?
பிறருடைய அறிவுசார்ந்த (காட்சி, இசை, மென்பொருள்) உடமையை தவரான முறையில் பயன்படுத்தினேனா?

பொதுவானவை:

என்னுடைய ஆன்மீக வாழ்விற்குத் தேவையான ஜெபம் என்வாழ்வில் முக்கிய இடம் பெறாமல் இருக்கின்றதா?
கிறிஸ்தவ வாழ்வின் மதிப்பீடுகளை வாழ்ந்து காட்ட கடவுளிடன் அருளைக் கேட்காமல் இருந்தேனா?
கிறிஸ்துவ வாழ்வில் துன்பம் வருகின்ற வேளைகளில் அதை தாங்கிக்கொள்ள இறைவனிடம் சக்தியை கேட்காமல் இருந்திருக்கிறேனா?
பிறரை மன்னிக்கின்ற நற்குணம் இல்லாமல் இருக்கிறேனா?
என்னை பகைவர் என்று நினைப்பர்களுக்காக ஜெபம் செய்கிறேனா?
என்னுடைய தேவைகளில் பிறர் உதவியை நாடாது தற்பெருமை கொண்டுள்ளேனா?
கடவுள் எனக்கு கொடுத்திருக்கின்ற திறமைகளையும் செல்வத்தையும் பிறறோடு பகிர்ந்து கொள்வதில் தாராளமுடன் இருக்கிறேனா?
உதவி செய்ய வசதியும் வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் கிடைத்தபோது சுயநலத்தோடு நடந்துகொண்டேனா?
உலக சமாதானத்திற்காகவும் மனித நேயத்திற்காகவும் ஜெபம் செய்ய மறந்திருக்கிறேனா?
நான், எனது குடும்பம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து விடுபட்டு பரந்த மனத்துடன் அனைவருக்காகவும் உதவி தேவைப் படுவோர்காகவும் உதவிசெய்ய, ஜெபம் செய்ய தயாராய் இருக்கிறேனா?
என்னுடைய ஞான மேய்ப்பர்களுக்கு என்னாலான உதவியைச் செய்கிறேனா?

எந்த அளவுக்கு கடவுள் எனக்கு திறமைகளையும், அருட்செல்வத்தையும், பொருட்செல்வவத்தையும் கொடுத்திருக்கிறாறோ அந்த அளவுக்கு அதிகமாக என்னிடம் பிறரன்புச் சேவையும் எதிர்பார்க்கிறார் என்பதை உணர்ந்து பிறரன்புச் சேவையிலும்,திருச்சபைக்கும் என்னால் இயன்ற பொருளுதவியைச் செய்வதிலும், நேரத்தையும், சக்தியையும் கொடுப்பதில் தாராளமாய் இருக்கின்றேனா?