கன்னிமரியே! தேவைகள் இருக்கும் உம் பிள்ளையின் அருகில் மறுக்காமல் வரும் அன்பின் தாயே! உம்முடைய உள்ளத்தில் உள்ள பேரிரக்கத்தினாலும் அன்பினாலும் ஏவப்பட்டு உம் பிள்ளையாகிய எனக்கு இடைவிடாமல் உதவிக்கரம் நீட்டுபவரே! உம் இரக்கத்தினால் என்னை அரவணைத்து, என் வாழ்வில் ஏற்பட்டுள்ள கடுமையான சிக்கலுடன் கூடிய இம்முடிச்சுகளைக் கனிவுடன் கண்ணோக்கியருளும் இம்முடிச்சுகளால் என் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள வலிகளையும் நம்பிக்கையின்மையையும் நீர் ஒருவரே அறிவீர் உம் பிள்ளையின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முடிச்சுகளை அவிழ்ப்பதற்கான சக்தியை ஆண்டவரிடமிருந்து பெற்றிருக்கும் தாயே! என் வாழ்வென்னும் நாடாவில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை உமது அருட்கரத்தில் ஒப்படைக்கிறேன். உம்முடைய அன்புக் கரங்களால் நீக்க முடியாத முடிச்சுகள் எதுவும் இல்லை, ஆற்றல் நிறைந்த அன்னையே! இம்முடிச்சுகளை அவிழ்க்க எனக்காக உம் திருமகன் இயேசுவிடம் அன்றாடம் பரிந்து பேசும்…
(மன்றாட்டுகளைக் குறிப்பிடவும்)
அன்பு அன்னையே! நீர் ஒருவரே ஆதரவற்ற நிலையில் எனக்கு ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் உள்ளீர் உம் மகன் இயேசுகிறிஸ்துவின் பெயரால் என் வாழ்வில் கட்டுண்டிருக்கும்
எல்லா தளைகளிலிருந்தும் என்னை விடுவித்து மீட்டருளும்.
என் வேண்டுதலைக் கேட்டு என்னைப் பாதுகாத்து வழிநடத்தியருளும்.
நவநாள் செபம் செய்யும் முறை
1 தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென்.
2 பாவமன்னிப்பு செபம் (நாம் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு
இனிமேல் பாவம் செய்ய மாட்டேன் என்ற உறுதிபாட்டை எடுத்தல்)
3. செபமாலையின் முதல் மூன்று பத்தினை செபித்தல்
4. பின்குறிப்பிடப்பட்ட நாளுக்குரிய தியானம் செய்தல்
5. செபமாலையின் கடைசி இரண்டு பத்தினை செபித்தல்
6. முடிச்சவிழ்க்கும் மரியன்னையிடம் செபத்துடன் முடித்தல்.
நாளுக்குரிய தியானம்
நாள் 1:
அன்பு அன்னையே! உனது பிள்ளைகளின் வாழ்க்கையில் இறுக்கிக் கட்டுண்டிருக்கும் இம்முடிச்சுகளின் மீது கருணைக்கரம் நீட்டியருளும். இம் முடிச்சிகளினால் என் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் எதிர் விளைவுகளையும் துன்பத்தையும், மனக் கலக்கத்தையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். முடிச்சவிழ்க்கும் அன்னை மரியே! பாவியாகிய நான் அடைக்கலம் தேடி உம்மிடம் வருகையில் ஒரு பொழுதும் நீர் என்னை வெறுத்து ஒதுக்கியதில்லை. ஆண்டவர் இயேசு உம்மீது அனைத்து வரங்களையும் பொழிந்திருப்பதால் உம்மால் அவிழ்க்க முடியாத முடிச்சுகள் ஏதுமில்லை. என்னுடைய அன்புத்தாயாக நீர் இருப்பதால் இம்முடிச்சுகளை அவிழ்க்க முடியும் என நம்புகிறேன். அன்பு அன்னையே உமக்கு நன்றி கூறுகிறேன்.
நாள் 2:
வரங்கள் நிறைந்த அன்னையே! நான் பாவி என்பதை உணர்ந்து என் பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்கிறேன். என் சுயநலம், தற்பெருமை, வெறுப்பு, அகங்காரம் ஆகிய தீயகுணங்களினால் உம்முடைய அருள் வரங்களை நான் உதறித் தள்ளியுள்ளேன். முடிச்சவிழ்க்கும் மாமரியே! தூய்மையும் தாழ்ச்சியும் நம்பிக்கையுமுள்ள நல்லுள்ளத்தை எனக்குத் தருமாறு உம் திருமகன் இயேசுவிடம் எனக்காகப் பரிந்து பேசும். இன்று நான் நற்குணங்களோடு வாழ்ந்து உம்முடைய அதிமிக அன்பிற்காக அனைத்தையும் அர்ப்பணிக்கின்றேன். இறைவனின் மகிமையை என்னில் ஒளிரச் செய்ய முடியாமல் தடுக்கக்கூடிய இந்த முடிச்சினை (…குறிப்பிடவும்) உம் அன்பின் கரத்தில் ஒப்படைக்கிறேன்.
நாள் 3:
விண்ணகத் தாயே! உமது இரக்கமிகு கண்களை என் மீது திருப்பியருளும்,உம்முடைய புனிதக் கரத்தில் இம்முடிச்சினை ஒப்படைக்கிறேன். (..குறிப்பிடவும்). எனக்குத் தெரிந்தோ, தெரியாமலோ இம்முடிச்சினை உருவாக்கக் காரணமாக இருந்த அனைவரையும் மன்னிக்கக் கூடிய மனதினைத்தாரும். என் உள்ளத்தில் உள்ள வெறுப்புணர்வை வேரறுத்து, என்னையே நான் மன்னிக்க வரம் தாரும். எனக்காக இம்முடிச்சிகளை அவிழ்த்ததற்கு நன்றி கூறுகிறேன்.
நாள் 4:
அன்பு அன்னையே! உம்மிடம் அடைக்கலம் அடைவோருக்கு
இரக்கம் காட்டுபவளே என் ஆன்மாவை கலக்கமுறச்செய்து, உள்ளத்திலுள்ள அமைதியை நிலைகுலைய வைத்து, என் வாழ்வில் தடைகற்களாக அமையும் இம்முடிச்சுகளை (.குறிப்பிடவும்) உம்பாதம் சமர்ப்பிக்கிறேன். உமது பேரருளில் நம்பிக்கைக்கொண்டு இம்முடிச்சிகளுக்காக நான் முணுமுணுக்காமல் அவற்றிற்காக நன்றி செலுத்தக்கூடிய நல்ல மனதைத்தாரும்.
நாள் 5:
இரக்கமும் அருளும் நிறைந்த முடிச்சவிழ்க்கும் அன்னை மரியே! இன்று உமது பாதத்தில் சிக்கலுடன் கூடிய இம்முடிச்சுகளை ஒப்படைக்கையில் (.குறிப்பிடவும்) அவற்றை நீக்குவதற்கான ஞானத்தையும், பரிசுத்த ஆவியின் கொடைகளையும் என் மீது பொழிந்தருளும். பேரிரக்கம் உள்ள தாயே இம்முடிச்சினால் என் வாழ்வில் ஏற்பட்டுள்ள வெறுப்பையும், கோபத்தையும், கசப்புணர்வையும் நீக்கும். அன்னை மரியே உம் உள்ளத்தில் நிறைந்திருக்கும் இனிமையையும், ஞானத்தையும் எனக்குக் கொடையாகத்தாரும். அப்போஸ்தலர்களோடு பெந்தெகோஸ்தேவின் போது நீர் இருந்தது போல் சிக்கல் நிறைந்த இந்த தருணத்திலும் என் வாழ்வில் தங்கி ஆவியின் வரங்களினால் என்னை வலுப்படுத்தும்.
நாள் 6:
இரக்கத்தின் அரசியே! என் வாழ்க்கையில் உள்ள இம்முடிச்சுகளை உம்மிடம்ஒப்படைக்கையில் (.குறிப்பிடவும்) நீரே அவற்றை முழுதும் அவிழ்க்கும் வரை பொறுமையாக காத்திருக்கக் கூடிய மனதை எனக்குத் தாரும். பாவமன்னிப்பிலும், நற்கருணையிலும், இறைவார்த்தையிலும் இம்முடிச்சுகளை நீக்குவதற்கான சக்தியைப் பெறுவேனாக. நான் வேண்டி பெற்றுக் கொள்ளக்கூடிய இந்த மாபெரும் வரத்தை அனைத்துத் தூதர்களோடும் ஒன்றித்துக் கொண்டாடுவதற்காக, என் உள்ளத்தைத் தயார்படுத்துமாறு உம்மை
கெஞ்சி மன்றாடுகிறேன்.
நாள் 7:
தூய்மையின் அன்னையே! என் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த முடிச்சுகளை (..குறிப்பிடவும்) அவிழ்த்து அனைத்துத் தீமைகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும். நான் எல்லா தீமைகளையும் விட்டுவிட்டு, இயேசு கிறிஸ்து மட்டுமே என் கடவுள் என்று சாட்சியம் பகர்வதற்கான ஆற்றலைத்தாரும்.
இம்முடிச்சுகளிலிருந்து என்னைக் கட்டவிழ்த்து விடுவித்து அருளும்.
நாள் 8:
இரக்கம் நிறைந்த கன்னி மரியே! என்மேல் இரக்கம் வைத்து என் வாழ்வில் ஏற்பட்டுள்ள இம்முடிச்சுகளை (..குறிப்பிடவும்) கருணைகண் கொண்டு பாரும். அன்று எலிசபெத்தைக் காண சென்றது போல் என்னையும் காண வாரும். இயேசுவையும், பரிசுத்த ஆவியையும் எனக்குப் பெற்றுத்தாரும். விசுவாசம், துணிவு, மகிழ்ச்சி, தாழ்ச்சி ஆகிய நற்குணங்களைப் பின்பற்றிவாழ எனக்குக் கற்பித்தருளும். உம்முடைய அன்பின் மடியில் நான் மகிழ்ச்சியுடன் இளைப்பாறுவேனாக. அன்பு அன்னையே! அரசியே! தோழியே! இந்த நாளை உம்மிடம் அர்ப்பணிக்கின்றேன். என்னையும், எனக்கென்று உள்ள எல்லாவற்றையும் உம்மிடம் அர்ப்பணிக்கின்றேன். நான் எப்பொழுதும் உமக்கே சொந்தம். இயேசுவின் போதனைகளை நான் முழுமையாக வாழ்ந்துகாட்ட உம்முடைய இதயத்தை எனக்குத் தாரும்.
நாள் 9:
பரிந்து பேசும் அன்னை மரியே! என் வாழ்க்கையில் உள்ள இம்முடிச்சுகளை (..குறிப்பிடவும்) அவிழ்த்ததற்காக நன்றி கூறுகிறேன். இம்முடிச்சுகளினால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை நீர் ஒருவரே அறிவீர். என்னுடைய கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை உம்முடைய இருகரங்களினால் துடைத்ததற்கு நன்றி கூறுகிறேன். என் வாழ்க்கையில் இம்முடிச்சுகளை அவிழ்த்ததற்காக நான் மீண்டும் மீண்டும் நன்றி கூறுகிறேன். உம்முடைய அன்பில் அரவணைத்து என்னைக் பாதுகாத்தருளும். உம்முடைய அன்பில் என்னை ஒளிரச் செய்தருளும்.