-திருமதி. மார்கரட்
எகிப்து நாட்டில் சைத்தூண் எனும் ஊரில் ஆர்தோடக்ஸ் கிறிஸ்தவர்களின் பழமை வாய்ந்த மரியன்னை ஆலயம் ஒன்று இருந்தது. அந்த ஆலயத்திற்கு எதிரே ஒரு தெருவில் முகமது பாருக் என்ற முஸ்லீம் சகோதரர் மெக்கானிக் வேலைச் செய்துகொண்டிருந்தார். அவர் ஒரு நோயாளி. அவரது தசை சிறிது அழுகியிருந்தது. அறுவைச் சிகிட்சைக்காகத் காத்து இருந்தார். அந்த ஆலயத்தை அவர் கடந்து போகும் போதெல்லாம் தனக்கு நோயிலிருந்து விடுதலை தரும்படி மரியன்னையை வேண்டிச் செல்வது வழக்கம்.
1968-ஆம் ஆண்டு ஏப்ரல் 2ம் நாள் அன்று வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முகமது பாருக் ஏதேச்சையாக நிமிர்ந்த போது, மின்னலைப் போல மிகுந்த ஒளி வீசும் ஒரு இளம்பெண் அந்த ஆலயத்தின் முகப்பிலிருந்து கீழாக குதிப்பது போன்ற ஒரு காட்சியைக் கண்டார். சில நிமிடங்களுக்கு இக்காட்சி நிலைத்தது. இக்காட்சியைக் கண்ட பிறகு நோயிலிருந்து அறுவைச் சிகிட்சை இல்லாமலே குணமடைந்தார்.
மேலும் இருவர் அந்த ஒளியின் கீற்றாகத் தன்னை வெளிப்படுத்திய மரியன்னையைக் கண்டனர். சம்பவம் காட்டுத் தீ போல பரவியது. மரியன்னையின் மகிமையைக் கேள்விப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடினர்.
அந்நாட்டுக் காவல்துறையும் அங்கு வந்தது. தடயவியல் அறிஞர்களும் வந்தனர். தடம் தேடிப் பார்த்தனர். தடயம் எதுவும் அகப்படவில்லை. அருகில் நின்ற தெருவிளக்கின் வெளிச்சத்திலிருந்து வந்த ஒளிச்சிதறல் என்று வெள்ளை அறிக்கை வெளியிட்டு கோப்பை மூடி அலமாரியில் வைத்தனர்.
தெருவிளக்கின் ஒளிக்கும் இறை ஒளிக்கும் வித்தியாசம் மக்களுக்குத் தெரியாதா என்ன? அரசின் சட்டத்திற்கு அது சாதகமாக இருக்கலாம். ஆனால் மரியன்னையின் காட்சி மக்களின் மனதில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அது மரியன்னைதான் என்று உறுதிபட கூறினர் மக்கள்.
ஒரு வாரத்திற்குப் பின்பு ஒளிவடிவில் மீண்டும் சில நிமிடங்கள் மரியன்னை தோன்றினார். 1971ஆம் ஆண்டு இறுதிவரை அடிக்கடி மரியன்னை காட்சியளித்துக் கொண்டே இருந்தார்.
இவ்வாறு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் காட்சி அளித்தார். அச்சமயத்தில் வெண்புறாக்கள் வானில் பறப்பது போன்றும், நட்சத்திரங்கள் வைரம் போல் மின்னி மின்னி ஊர்வது போலவும், வானம் மிகுந்த ஒளிச்சுடரில் காட்சியளித்திருக்கிறது.
யூதர், இந்து, முஸ்லீம் கிறிஸ்தவர் என இரண்டரை இலட்சம் பேர் மரியன்னையின் இக்காட்சியை கண்டு ஆசீர் பெற்றிருக்கின்றனர். நோய் நீங்கப் பெற்றிருக்கின்றனர். மனதின் தனிமை உணர்வு நீங்கப் பெற்றிருக்கின்றனர். சமாதானம் பெற்றிருக்கின்றனர்.
அதே வருடம் மே 4ஆம் தியதி ஆர்தோடக்ஸ் போப் ஆறாம் கிலாரியூஸ் ஒளிவடிவில் தோன்;றிய மரியன்னையின் அற்புதத்தை அதிகாரபூர்வமாக அறிக்கையிட்டார்.